வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வளியும் தமிழும்




வெட்டவெளியைத் தொளைத்துக் கொண்டு சொல்வதால், காற்றுக்கு வளி என்று பெயர். ஓரிடத்திலேயே மண்டிக்கொண்டு புகை போலக் காற்று நிற்பதில்லை.வள் என்னும் வேருக்கு தொளை, தொளைத்தல் என்ற பொருள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

வளியைக் கொண்டு வரைந்துக் கொண்ட சொற்கள் தாம் சூறாவளி,கடுவளி. சூறாவளி என்பது புயல் காற்றைக் குறிக்கும்.கடுவளி என்பதும் புயல் காற்றைக் குறிக்கும் மற்றொரு சொல்.

வளி என்ற உடன் நினைவிற்கு வரும் வள்ளுவரின் இரண்டு குறள்கள் தாம்.

முதல் குறள்;

அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா ஞாலங் கரி. ( குறள் எண் : 245 )

இந்தக் குறளுக்கு கலைஞர் அவர்களின் விளக்கவுரை இன்னும் அழகு சேர்க்கும்.கீழே உள்ள பொருளைக் காணுங்கள்.

உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.

இரண்டாவது குறள்;

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. (திருக்குறள்-941)

நூலோர் சொல்லும் காற்று ,பித்தம், கோழை என மூன்று மிகுந்தாலும் குறைந்தாலும் உடலில் பல்வேறு நோய்கள் உண்டாகும். என்பதை இந்தக் குறளில் குறிப்பிடுவார்.

ஐம்பெரும் பூதங்களில் வளியும் ஒன்று என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர்

"மண் திணிந்த நிலனும்,
நிலம் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப் " என்று இயம்புவார்.

வளி என்ற உடன் நினைவிற்கு வரும் இந்த கவிதை தான்.

விழிமொழியாளே
விரைந்து
வழி ஒன்று
விளம்பு இல்லையெனில் என் உயிர்
வளி நின்று விடும்.

காதலி இடம் கடிதம் கொடுத்த விடைக்காக விரைந்து காத்திருக்கும் காதலன் உள்ளத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

வளி என்பதை " Gas " என்னும் சொல்லுக்கு இணையான சொல்லாக இயம்புகிறோம்.

தமிழில் ஒரு எழுத்து மாறினாலும் பொருள் மாறும் சொல்லில் அந்தச்சொற்களில் இந்த வளியும் ஒன்று.

வலி - pain
வளி - Gas
வழி - Path

புதையல்