வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வயதின் வேதனை



( Thanks : Images - www.coloring-pages-kids.com/ )

வயதாகி விட்டால் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய தானே என்று முதியோர்களை முணுமுணுக்கும் வார்த்தைகள் வயதின் வேதனையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

இன்னும் ஒருபடி மேலாக,

"

வயதாகி விட்டால்
வயோதிகருக்கு
வளர்ந்துவரும் சமுதாயம்
வழங்குவது
வளர்த்துவிட்ட
முதியோர் இல்லமா ?
" என்பதும்,

"
வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன் " ( நன்றி அனுஜன்யா அவர்கள் )

என்னும் வரிகளும் உள்ளத்தில் வலியை ஏற்படுகிறது என்பது உண்மை.

வயதுக்கே இத்தனை வலி என்றால், அச்சொல்லையே வேற்றுமொழிச் சொல்லாக வரையறுத்த கொடுமையை என்னவென்று இயம்புவது ?

வாழும் உலகத்தை வையம், வையகம் என்று எல்லாம் அழைக்கின்றோம்.
வையத்திற்கும்,வாழ்விற்கும் ஆதாரமானது உழவுத்தொழில்.அதனால் தான் வான்புகழ் வள்ளுவரும்,

"
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை " என்றார்.

உணவிற்கும்,விளைச்சலுக்கும் உறைவிடமாக விளக்கும் நிலத்தை வைத்திருந்த காரணத்தாலே வை - வய் - வயல் என்று அழைக்கப்பட்டது.அது மட்டுமா?


உணவு உட்கொள்கின்றோம்.அது உள்ளே சென்று ஒரு இடத்தில் வைக்கப்படுகின்றது.அந்த வைக்கப்பட்ட பகுதியே வை - வய் - வயிறு என்று கூறப்பட்டது.

வயிறு பற்றி வள்ளுவர் கூறுவதைக் கேட்டால் இன்னும் வியப்பின் விளம்பிற்கே இட்டு செல்லும்.

"
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி " என்பார்.

இதன் பொருள் என்னவென்றால்,

பொருளை ஈட்டுகின்றோம்;செல்வத்தை வைக்குமிடம் எது ?.
வங்கியிலா ? இல்லை வீட்டிலா ?
இல்லை இல்லை அதை வைக்க வேண்டிய இடம் ஏழைகளின் வயிறு என்று விளக்கமளித்து
உலகத்தில் வறுமையை விரட்டும் வழியை கூறுகின்றார்.

தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்; வையத்தில் வாழ்கின்றோம்; நாளும் பொழுது வளர்கின்றோம்; இந்த வளர்ச்சியை எப்படி வரையறுப்பது ?
உயரத்தைக் கொண்டா? இல்லை
உருவத்தைக் கொண்டா ? இல்லை இல்லை
வையத்தில் வாழ்கின்ற நாள்களைக் கொண்டு தானே,
அதனால் தான் வை - வய் - வயது என்று அகிலத்தில் இருக்கும் நாள்களை அளவிடக் கொண்டு அழைத்துக் கொண்டோம்.

பார்த்தீர்களா !!!
வாயில் வரும் வார்த்தையாக எல்லாம் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.

வயதைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல்தான் அகவை என்பது. அகவை என்று அழைக்கப்பட்டதின் காரணம் தான் என்ன?

கொஞ்சம் ஆராய்ந்துதான் பார்ப்போமே.

அகவை என்பதை அகம்+வை என்று பிரிக்கலாம். அகம் என்றால் என்ன?.
உள்ளம் என்பதையே அகம் என்று அழைக்கின்றோம்.

உலகியலை உற்று நோக்கினால் உணர முடியும். உடல்வலிமை இருப்பவர்கள் கூட உள்ளத்தில் உறுதியற்று, உவகையற்று இருப்பதால் வேதனைத்தீயில் வாடுவதைக் கண்ட
வாழ்வியல் தமிழன்,

உடம்புடன் உடன்பாடு கொள்வதைவிட உள்ளத்தோடு உடன்படிக்கை செய்வதே உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க உதவும் என்பதாலே அகம் என்பதை அளவுக்கோலாக கொண்டு வயதை அகவை என்று அழைத்திட்டான்.

வயதின் வரையறையும், அகவையின் அளவுக்கோலையும் அறியும் பொழுது அன்னைத்தமிழ் மேல் அளவிலா உவகை உண்டாகிறது அல்லவா.

வயதை இன்னும் வேற்றுமொழிச்சொல்லாக வகைப்படுத்துபவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்.

உருவ ஒற்றுமையில் ஒத்திருப்பதை விட உள்ளணுக்கள் ( DNA ) ஒத்துப்போனாலே உறவுகள் கூட உரிமை கொண்டாடும் உலகத்தில் உகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இது வெறும் அறிவியல் அடிப்படை உண்மை மட்டுமல்ல, சொல்லாராய்ச்சிக்கும் அளவுக்கோல் இது என்பதை மறந்துவிட கூடாது.

இப்படி எல்லாம் அள்ள அள்ள குறையாத அமுதம் அன்னைத்தமிழில் அமைந்திருக்கையில்
அயல்மொழிக்கு அடிமையாக கூடாது என்பதே என் அவா.