வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label திருக்குற‌ள். Show all posts
Showing posts with label திருக்குற‌ள். Show all posts

வள்ளுவரும் வாலியும் -2

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (குறள் 45)


இல்லறம் - என‌
இயம்பப் பெறும் -

வாழ்க்கை
வயலில் ...

அன்பும் அறனும் விதைநெல் ;
பண்பும் பயனும் விளைநெல் !



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்றை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். (குறள் 185)


அறம்பேசும் நெஞ்சம்
அதுவல்ல என்பதை - அது
புறம்பேசும் நேரம்
புரிந்து கொள்ளும் மன்பதை !



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)


பொறாமையைப் -
பொடி;
அவாவை -
அடி;
வெகுளியை -
விடு ;
சுடு சொல்லைச் -
சுடு ;

நான்கும்
நான்கு தீங்கு ;அவற்றின்
நிழலில்
நிற்காமல் நீங்கு !

நான்கையும் புறம் - தள்ளி
நடத்துதல் அறம் !


கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. (குறள் 356)


மெய்கண்டாரிடம் செல் ;
மெய்ப்பொருளைக் கல் !

பிறக்கையில் ஒரு குழி ;
இறக்கையில் ஒரு குழி ;

இவை
இரண்டையும்
தவிர்த்திடத்
தென்படும் ஒரு வழி !

வள்ளுவரும் வாலியும் -1



எவ்வளவோ பேர் திருக்குறள் விளக்கம் எழுதிவிட்டாலும், வாலியின் வசன வடிவில் எழுதிய கவிதையுரை படித்துப் பாருங்கள். வார்த்தையில் விளையாடி இருப்பதைக் காணலாம்.





காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. ( குறள் எண் : 122 )


அடக்கம் என்பது
அரும்பொருள் ; கட்டிக் கா ;
அதனிலும்
அரும் பொருள் கிடைக்கா !




மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. ( குறள் எண் : 65 )


உடலுக்கு இன்பம் - நம் சேயின்
விரல் படல் ; நம் -
காதுக்கு இன்பம் - நம் சேயின்
குரல் படல் !




சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. ( குறள் எண் : 267 )


வெப்பம் கூடக்கூடச்
செப்பம் ஆகும் தங்கம் ;
வருத்தம் கூடக்கூடத்
திருத்தம் ஆகும் தவம் !




நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். ( குறள் எண் : 334 )


நாள் ஒரு
வாள் ; அது
வாழ்வை அரியும் - என‌
வாலறிவு அறியும் !




பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. ( குறள் எண் : 347 )


ஒட்டிக் கொள்ளும் ஆசைகளை
உதறுக; உதறாவிடில் -
கட்டிக் கொள்ளும் கவலைகள் ;
கதறுக !





காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )


சின்ன உதவி
செய்தாலும் ;அது -
என்ன உதவி
என்றாலும் ;

அதை
அவன் -
காலத்தில் செய்ததைக்
கவனி ;
அதைவிடப் பெரியதல்ல - இவ்
அவனி !