வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label முனைவர் கு.அரசேந்திரன். Show all posts
Showing posts with label முனைவர் கு.அரசேந்திரன். Show all posts

கொச்சையாக்கலாமா ?




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

அவன் என்னைக் கொச்சைப்படுத்திவிட்டான் என்று சொல்லி வேதனைப்படுகின்றோம்; சினப்படுகின்றோம்.


கொச்சைப்படுத்துதல் என்றால் என்ன ?


போருக்குச் சொல்லும் குதிரைகளை அந்நாளில் அழகுபடுத்துவர். குதிரைகளின் கழுத்தில் நீண்டு வளர்ந்து தொங்கும் பிடரிமயிரைக் கத்தரித்து விடுவதும் அந்த அழகு செய்வதில் அடங்கும்.இவ்வாறு கத்தரித்து விடப்பட்ட பிடரிமயிரை உடைய குதிரையைக் " கொய்யுளை மா " என்று சொல்லுவர்.


" கொய்தல் " என்பதற்குக் குறைத்தல் என்பது பொருள். " உளை " என்பதற்கு அசைகின்ற பிடரிமயிர் என்பது பொருள். மயிர் குறைக்கப்பட்ட மாவே இங்குக் " கொய்யுளை மா " எனப்பட்டது.


இந்தக் கொய்தல் அடியாகத்தான்

கொய் - ‍கொய்சு - கொய்ச்சு - கொய்ச்சை - கொச்சை

என்னும் சொற்களும் தோன்றின. ஒருவருக்கு உரிய மதிப்பைக் குறைத்து விடுதலே " கொச்சைப்படுத்துதல் " என்பதற்குப் பொருளாகும்.


மொழிவழக்கிலும் கொச்சைவழக்கு என்பது இன்று பேசப்பட்டு வருகின்ற ஒன்றாகும்.
மொழியில் உள்ள சொற்களைச் செப்பமாகப் பேசாமல் அதனதன் வடிவைச் சிதைத்துக் குறைத்துப் பேசுவதே " கொச்சை " என்பதற்குப் பொருளாகும்.


சொற்களை அப்படியே முழுமையாகப் பேச முடியாமல் திரித்துக் குறைத்துப் பேசுவதும் எழுதுவதும் தவிர்க்க முடியாததே. சான்றோர்கள் வழக்கிலும் இது நிகழ்ந்து வந்துள்ளது.


" இந்தப் பூவினை மோந்துபார் " என்று சொல்கிறோம். மோந்துபார் என்பதன் உண்மையான வடிவம் " முகர்ந்து பார் " என்பதுதான்.

முகர் - முகர்தல் - முகர்ந்து பார்த்தல் - மோர்ந்து பார்த்தல் - மோந்து பார்த்தல் என்றுதான் இச் சொல் சிதைந்தது.


முகர் - முகர்ப்ப நாய் - மொகர்ப்ப நாய் - மோர்ப்ப நாய் - மோப்ப நாய் என்றெல்லாம் இந்த வகையில்தான் நாம் இன்று பேசியும் எழுதியும் வருகிறோம்.


திருவள்ளுவரும் இந்த எளிய பேச்சு வழக்கினை ஒத்துக்கொண்டு " மோப்பக் குழையும் அனிச்சம் " என்றே சொல்லியுள்ளார்.

மொழியின் சொற்கள் பலவும் இவ்வாறு பேச்சு வழக்கில் திரிய நிறைய வாய்ப்பிருக்கிறது. பேச்சுத்தமிழ் என்பது பெரும்பாலும் முழுச்சொற்களின் சிதைந்த வடிவங்களையே கொண்டுள்ளது.

வந்து ஆயிற்று என்பது " வந்தாச்சு " என்றும் தின்று ஆயிற்று என்பது " தின்னாச்சு " என்றும் திரிவது போல நிறையச் சொல்லலாம்.

எளிமை காரணமாக - ‍விரைவு காரணமாக மொழியின் சொற்கள் பேச்சு வழக்கில் திரியலாம். மொழியின் இந்த இயல்பை உணராமல் பேச்சு வழக்குத்தான் உண்மையான தமிழ். அந்தத் தமிழைத்தான் எழுதவும் வேண்டும் என்போர்கூட நம்மிடையை உள்ளனர்.


" நஞ்ச , புஞ்ச " என்று பேசுகிறோம். ஆதிமாந்தன் வேளாண்மையை எப்படி உருவாக்கினான் என்ற வரலாற்றை இந்தக் கொச்சை வழக்கினால் அறிந்து கொள்ள முடியாது.கல்லும் முள்ளுமாய் இருந்த நிலம் விளைவிற்காகச் செய்யப்பட்டது.அதுவே " செய் " என்று ஆயிற்று. தமிழில் " செய் " என்பதற்கு " நிலம் " என்று பொருள். நன்றாகச் செய்யப்பட்ட நிலம் " நன்செய் " என்றும் புன்மையாகச் செய்யப்பட்ட நிலம் " புன்செய் " என்றும் இந்த வகையில்தான் பெயர் பெற்றன.


நம்மைக் கொச்சைப்படுத்தினால் நம் மதிப்பு மட்டும்தான் குறையும். மொழியைக் கொச்சைப்படுத்தினால் நம் முன்னோர்கள் கண்ட அனைத்து அறிவும் கொச்சைப்பட்டு குறைகின்றது. தன்மானம், இனமானம் என்று மேடையில் முழங்கும் போலிகளுக்கு மொழிமானம் என்கின்ற ஒன்று தெரிவதேயில்லை. உண்மையில் மொழிமானமே எல்லா மானங்களுக்கும் மூலமும் முதலும்.



இனிப்பான கற்கண்டிலுள்ள கசப்பான உண்மை ( கண்டி- Candy )




" கற்கண்டு " , " நூற்கண்டு " நாம் நாளும் சொல்லும் சொல். இவற்றோடு உறவுடையவையே
" உப்புக்கண்டம் " , தயிர்க்கண்டம் " என்பனவும். இந்தக் கண்டு - கண்டம் என்னும் சொற்களுக்கு உருண்டு திரண்டது என்பதே மூலப்பொருள். சீனிப்பாகு உருகி இறுகிக் கல்லானது. நூல் தனித்தனி இழையாக இருந்தது பந்தாகச் சுற்றப்பட்டு உருண்டையானது, இது
நூற்கண்டு எனப் பெயர் பெற்றது. துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சியில் உப்பினைச் சேர்த்துக் காய வைத்து எடுத்துக் கொள்கின்றோம். இது உப்புக்கண்டம். தண்ணீர் போல் இருந்த பால் பிரை குற்றியவுடன் கட்டித்தயிரானது. இதுவே தயிர்க்கண்டம்.

ஒன்றோடு ஒன்றாய் இறுகிச் சேர்ந்த பொருள் தனிப்பொருளாகத் தனித்தனி பகுதியாக வேறொன்றி லிருந்து பிரிந்துவிடும். இதன் வழியாகத்தான் இந்த மண்ணுலகில் தனியாகப் பிரிந்திருக்கும் நாட்டுப் பகுதிகள் இந்தியத் துணைக்கண்டம், அமெரிக்காக் கண்டம் எனக் கண்டப் பெயரால் அழைக்கப்பட்டன.



ஒரு நூலில் அமைந்த தனித்தனி உட்பகுதிகள் கூட இந்த வகையில் தான் கண்டம் - காண்டம் எனப்பட்டதும்.

கரும்பைச் சாறு பிழிந்து வெல்லம் செய்கிறோம். இந்த வெல்லப்பாகு இறுகியதும் சருக்கரைக் கட்டி என்று பெயர் பெறுகிறது. இந்தச் சருக்கரைக் கட்டி உருண்டு திரண்டிருப்பதால் " சருக்கரைக் கண்டி " என்றும் வழங்கப் பெறுகிறது. கண்டமாய் இருப்பது கண்டியாகும். அதாவது உருண்டு திரண்டிருப்பது என்பது இதற்குப் பொருள்.

தமிழில் தோன்றிய இந்தச் " சருக்கரைக் கண்டி " என்னும் பொருள் ஆங்கிலத்தில் " Candy "
என்று அப்படியே அழைக்கப்படுகிறது. பிரெஞ்சு,இத்தாலி,பெர்சிய,அரபு என்று மேலைமொழிகள் பலவற்றிலும் சருக்கரைக் கண்டி " Sugar Candy " , " Succhero Candy " என்பனவாகச் சொல்லப்பட்டு வருகின்றன.

இனிப்பான இந்தக் கண்டிச் சொல்லில் கசப்பான உண்மை ஒன்றிருப்பது என்னவென்றால் மாமேதை கீற்று ( SKEAT ) போன்றோர் கூட இச்சொல்லின் மூலமறியாமல் கூறியிருப்பதுதான்.

Candy - to crystallise ; (F., Ital., Pers ) F. se candir, - to candie ; Cot., Ital. candire - to candy ; Ital. candi - candy; succero candi - sugar candy; Pers. and Arab. quand, sugar - candy; Whence; Arab. qundi. - made of sugar. The word ia Aryan ( Pers ) ; cf . Skt. khandava - sweetmeats; Khanda - a broken piece.

(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

களம் - Collum




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

நமது சொற்களத்தில் இப்பொழுது காணவுள்ள ஒரு சொல் " களம் " ஆகும்.

நெற்கதிர்கள் அறுக்கப்பட்டுக் களத்திற்கு வருகின்றன; வீரர்கள் போர்க்களத்தில் தங்கள் பகைவர்களைச் சந்திக்க ஆயுத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள்; கலைஞர்கள் கூத்தாடும் ஆடுகளத்தில் மக்கள் வெள்ளம் போல் திரண்டிருக்கிறார்கள்; ஆயுதக்களத்தில் ஏராளமான ஆயுதங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன.இப்படி இன்னும் பலப்பல களங்கள் நம் மொழி வழக்கில் இடம்பெற்றுள்ளன.

மேற்சொல்லப்பட்ட தொடர்களில் வரும் எல்லாக்களமும் ஒரே பொருள் உடையவை. வயற்களம், போர்க்களம், ஆடுக்களம், ஆயுதக்களம் போன்ற எக்களம் ஆயினும் அனைத்திற்கும் கூடும் இடம் என்கின்றவொன்றே அடிப்படைப் பொருளாகும்.

பத்துக் காணி நிலத்தில் விளைந்த நெல் ஓரிடத்தில் குவிக்கப்படும் இடமே வயற்களம்; இருநாட்டுப் படைவீரர்களும் ஓரிடத்தில் வந்து கூடிப் போர் செய்யும் இடமே போர்க்களம்; ஆயுதங்கள் குவிக்கப்பட்ட இடமே ஆயுதக்களம்; ஊர்மக்கள் யாவரும் வீடுகளைவிட்டுக் கூத்து நடக்கும் இடத்தில் கூடியிருக்கும் இடமே ஆடுக்களம்.

களம் என்னும் சொல் கள் + அம் என்பதாகப் பிரியும். இந்தக் " கள் " என்பதற்கு கூட்டம் என்பதே வேர்ப்பொருள். மாடு - மாடுகள்; வீடு - வீடுகள் என்றவிடத்தில் " கள் " பன்மையீறு எனப்படும்.இந்தப் பன்மையீறு " கள் " ளும் " களம் " சொல்லின் " கள் " ளும் வேறல்ல.

மக்கள் பருகும் " கள் " உண்டல்லவா அதுகூட இந்தக் கூட்டப் பொருளில் உருவானதே. மாலையில் வெறுங்கலத்தைக் கட்டிவிட்டு வரும் " கள் " இறக்குபவர் மறுநாள் காலையில் கலயம் நிறைந்திருப்பதைப் பார்க்கிறார். இங்கே நிகழ்ந்தது சிறுதுளிப் பெருவெள்ளம் என்கின்ற உண்மையே.

" களம் " என்னும் சொல்லிற்குக் கழுத்து என்னும் பொருளும் உண்டு. சிலப்பதிகாரத்திலும், திருமந்திரத்திலும் இப்பொருளில் ஆட்சி உண்டு. மேலைய களங்கட்கும் இந்தக் கழுத்துக் களத்திற்கும் உறவிருக்கிறது. நமது உடம்பில் கழுத்து வரை உள்ள உடல் ஒரு பகுதி. கழுத்திற்கு மேலே உள்ள கண், மூக்கு, வாய் , காது ஆகியவை அடங்கிய தலை, பிறிதொரு பகுதி. இந்த இரு பகுதிகளையும் கூட்டுவிக்கும் காரணத்தால் தான் கழுத்திற்குக் " களம் " என்னும் பொருள் பொருந்துவதாயிற்று.




C.O.D அகராதி கழுத்தைக் குறிக்கும் " neck " என்னும் சொல்லிற்குக் கூறும் முதற்பொருள் வரையறை இதுதான்.

neck - the part of the body of an animal or human being that connects the head and the trunk.

இலத்தீன் மொழியில் " Collum " என்னும் சொல் கழுத்தைக் குறிக்கும். இந்த " Collum " என்பதிலிருந்துதான் மேற்சட்டையின் கழுத்துப் பட்டியைக் குறிக்கும் " Collar " என்னும் சொல் உருவானதாக ஆங்கில அகராதிகள் தெரிவிக்கின்றன.



Collum - the neck, Lit. of men and animals; - cassela Latin Dictionary

Collar - (F.,L.) ME. coler; OF. colier, - a coller; L. collare - a band for the neck;L . Collum - the neck ; + AS. heals; G. hals - neck. - SKEAT.

ஆங்கிலோ சாக்சன், செருமன் மொழிகளில் " களம் " என்னும் தமிழின் நெருங்கிய வடிவே இருப்பதைக் கீற்று அகராதியில் காண்க.

எழுந்து வந்த " எல் "




(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டும் என்பது திருவாசகம். பாடும் பாட்டிற்கு உரிய பொருளின் ஆழத்தை உணர்வதுமட்டும் போதாது. சொல்லும் ஒவ்வொரு சொல்லிற்கும் உள்ள பொருளையும் நாம் ஆழமாக உணர வேண்டும்.

" எல் " என்னும் சொல் கதிரவனைக் குறித்தது என்று அறிவது முதல்நிலை. ஏன் கதிரவனை
" எல்" என்று சொன்னோம் என்று அறிவது இரண்டாம் நிலை.

ஒரு தமிழ்ச்சொல் என்ன காரணத்தால் என்ன பொருளில் எந்த வேரிலிருந்து பிறந்திருக்கின்றது என்று நாம் முதலில் கண்டு தெளிய வேண்டும். அந்தத் தெளிவு நமக்கு வந்த பிறகுதான் பிற மொழிகளில் புழங்கும் இன்ன இன்ன சொற்களுக்கு இந்தத் தமிழ்ச்சொல் மூலமாக இருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். உலக மொழிகளின் வேர்ச்சொல் அறிஞர்கள் கையாளும் நெறிமுறைகளில் அடிப்படையானது இதுவே.

கதிரவன் " எல் " என்று அழைக்கப்பட்டதற்கு அது ஒளியுடையதாய் இருப்பதே காரணம் என்று பலரும் கூறுகின்றனர். " எல்லே இலக்கம் " என்னும் தொல்காப்பிய நூற்பாவினை இதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு கூறும் அறிஞர்களிடம் " எல் " என்னும் சொல்லிற்கு " ஒளி " என்னும் பொருள் எவ்வாறு தோன்றியது என்று கேட்போமானால் அவர்களால் அதற்கு விடை சொல்ல முடியாது. ஆதலால் கதிரவன் ஒளியுடைதாய் இருப்பதால் " எல் " என்று சொல்லப் பட்டது என்னும் கருத்து பொருத்தமாகப் படவில்லை.

" எல் " என்பதற்கு உயர்தல் , மேலெழுதல் என்பதே மூலப்பொருள்.பின்வரும் சொற்களைக் கவனியுங்கள்.

எல்- எல்பு- எம்பு - எம்புதல் = மேலெழுதல்

எல் - எல்கு - எக்கு - எக்குதல் = வயிற்றை மேலே உயர்த்தல்

எல் - எல்கு - எக்கு - எக்கர் = நீர்நிலைகளில் உயர்ந்திருக்கும் மணல்திட்டு

இப்படியாகப் பல சொற்கள் " எல் " வழி உருவாகியுள்ளன.



கதிரவன், தோற்றம், கலையில் கீழ்த்திசையில் கடலில் தோன்றி மேலெழுந்து உயர்ந்து வருவது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. அதன் காரணமாகவே கதிரவனுக்கு " எல் " என்னும் பெயரைப் பழந்தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன் சூட்டினார்கள்.

" அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி "

என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடரில் பருதியாகிய கதிரவனின் எழுதரும் தன்மை சுட்டப் பட்டுள்ளது.

கதிரவனின் சிறப்புக்களில் கடலில் காலையில் மேலெழுந்து உயர்தல் போன்ற காட்சித் தன்மையே அதன் முதற் பொருள். ஒளியுடையதாய் இருக்கும் அதன் சிறப்பு வழிப்பொருள்

பிலம்

மக்கள் மிகுதியாக புழங்காததொரு தமிழ்ச் சொல், " பிலம் " என்பது. இதற்குச் சுரங்கம், குகை என்பது பொருள்.




" திருமால் குன்றத்துச் செல்கு விராயின்
பெருமாள் கெடுக்கும் பிலமுண்டு "

-சிலப் .காடுகாண்.,(91-92)

என்பது இளங்கோவடிகள் வாசகம்.

கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும், உறையூரிலிருந்து மதுரை நோக்கிச் செல்கிறார்கள். வழியில், பாண்டி நாட்டிலிருந்து திருவரங்கப் பெருமானை வணங்கவரும் மாங்காட்டு மறையோன் ஒருவனைச் சந்திக்கின்றார்கள். பாண்டியர் பெருமை, பாண்டிநாட்டிப் பெருமை பற்றியெல்லாம் அம்மறையோன், கோவலன் முதலானோரிடம் கூறுகிறான். அப்பொழுது, மதுரை செல்லும் வழியுரைக்கும்போது மலவன் குன்றம் வரும் என்றும், அக்குன்றத்தில்
" பிலம் " ஒன்று உள்ளது என்றும், அப்பிலத்துள் மூன்று பொய்கைகள் உள்ளன என்றும் கூறுகின்றான்.

கம்பராமாயணத்திலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது.சிறைபட்டிருக்கும் சீதையை வானரங்கள் தேடுகின்றன்; குகை ஒன்றிற்குள்ளும் சென்று தேடுகின்றன். இதனைக் கம்பர்,
" பிலம் புக்கு நீங்கு படலம் " என்ற பகுதியிற் சொல்வார். மண்ணிற்குள் ஆழமாய்ச் சென்றிருக்கும் குகையை இப்பிலச்சொல் எவ்வாறு குறித்தது ?

தமிழில், " புல் " என்பதற்குத் துளை என்பது பொருள். பச்சைநிறப் புல்லும், அது துளையுடையதாய் இருப்பதனாலேயே அப்பெயரைப் பெற்றது. புல் என்னும் இத்துளைப் பொருள் வேர்ச்சொல்தான், புல்-புலம் எனத் துளையுடைய குகையைக் குறித்துப், பின் புலம்-பிலம் எனத் திரிவதாயிற்று. கால்நடைகள் உண்ணப் பயன்படும் புல், பேச்சு வழக்கில், பில்-பில்லு எனத் திரிவது காணலாம். இங்கு உகரம் - இகரமாக மாறியுள்ளது.

சில இடங்களில், மொழியில் மூலவழக்கினும், அதிலிருந்து திரிந்த அடுத்தகட்ட வழக்கே செவ்வழக்குத் தகுதியைப் பெற்று விடுவதுண்டு. புய் - என்பதிலும் பிய் என்பதே இன்று செவ்வழக்கு.

புய் - பிய் போலவும், புல் - பில் போலவும், உகர - இகரத் திரிபில், புல் - புலம் -பிலம் என்பதாகவே இக் குகைச்சொல் தமிழில் தோன்றியது.

(முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் தமிழறிவோம் (தொகுதி - 2 ) என்னும் நூல் இருந்து )

குகைப் பாதை, சுரங்கப் பாதை என்னும் சொற்களுடன் பிலப்பாதை, பிலச்சாலை என்கின்ற புதியச்சொற்களை உருவாக்க முடியும்.

இல்லையெனில் புலப்பாதை, புலச்சாலை என்றும் சொல்லாக்கம் செய்யமுடியும்.

1.underpass - புலவழிச்சாலை (கீழே உள்ளப் படத்தைப் பார்க்க)

2.outer ring road - புறவழிச்சாலை (கீழே உள்ளப் படத்தைப் பார்க்க)






சொல் அகராதி


1.பிலம் - குகை , சுரங்கம் - cave



2.underpass - புகுவழிப்பாதை, புலவழிப்பாதை

3..outer ring road - புறவழிச்சாலை