வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

Showing posts with label வெண்பா. Show all posts
Showing posts with label வெண்பா. Show all posts

வண்ணா !



மல்லரை வென்ற மணிவண்ணா! உந்தன்
மலரடி போதும் மணிவண்ணா! எந்தன்
கவலையைப் போக்கிடும் கார்வண்ணா! இன்பக்
கவிதையைக் கேள் கார்வண்ணா!

அவனியைக் காக்கும் அகில்வண்ணா! உந்தன்
அவயமே போதும் அகில்வண்ணா! எந்தன்
மமதையைக் போக்கும் முகில்வண்ணா! இன்பத்
தமிழ்தனைக் கேள் முகில்வண்ணா!

எண்ணில் இருக்கும் எழில்வண்ணா! உந்தன்
உணர்வொன்றே போதும் எழில்வண்ணா! எந்தன்
பிணியினைப் போக்கும் பிறைவண்ணா ! இன்ப
மணிமொழியைக் கேள் பிறைவண்ணா !

குறையினைத் தீர்க்கும் குழல்வண்ணா ! உந்தன்
குறும்பொன்றே போதும் குழல்வண்ணா ! எந்தன்
வறுமையைப் போக்கும் விழிவண்ணா ! இன்ப
மறையினைக் கேள் விழிவண்ணா !

மகிழ்ச்சியை நல்கும் மலர்வண்ணா ! உந்தன்
மகிமையே போதும் மலர்வண்ணா ! எந்தன்
பிறவியைப் போக்கும் புவிவண்ணா ! இன்பம்
நிறைந்திட கேள் புவிவண்ணா !

***********************************************************************
புன்னகையால் புவியாளும் பாலகனுக்கு பைந்தமிழால் படைக்கும் பாமாலை (வெண்பா மாலை)
*************************************************************************

தெய்வத் தமிழ்மாலை



முத்து நிகர்மாலை முன்வந் தருள்மாலை
சித்து நிறைமாலை செம்மொழிசெய் - பத்திநிறை
அம்பலவன் பேர்துதிக்கும் அன்புத் தமிழ்மாலை
சம்மத மாலையெனச் சாற்று.

பூமாலை நல்ல புகழ்மாலை போற்றியெனும்
பாமாலை பத்தி பகர்மாலை - மாமாலை
நெஞ்சில் நிறைமாலை நேர்கதி சொல்மாலை
பஞ்சாட் சரமாலை பாடு.

ஏற்ற புகழ்மாலை இனிய தமிழ்மாலை
கூற்றந் தவிர்மாலை குற்றமதை - மாற்றிவிடும்
போதத் தவமாலை புத்தமைதி கொண்டுலவும்
நாதமலை நம்மாலை நம்பு.

தேனாய் இனித்துத் திகழ்மாலை நம்மை
ஊனாய் உருக்கும் உயிர்மாலை - கானாற்று
வெள்ளமென நல்லருள் மேவுமாலை நம்பிக்கை
கொள்ளென்னும் பாமாலை பாடு.

ஓதுவார் நெஞ்சிலுறை ஒப்பற்ற பாமாலை
தீதுதவிர் தேவாரச் சீர்மாலை - மோதுபுகழ்
கொள்மாலை வெள்ளிமாலைக் கோன்மாலை நம்மிதயப்
புள்மாலை என்றே புகல்.

சாற்றும் மறைமாலை சந்தனச் சொல்மாலை
பொற்றற் குயர்மாலை பூமாலை - தோற்றம்
தருமாலை நம்மின் தொடர்மாலை நால்வர்
பெருமானார் சொல்மாலை பேசு.
..........................................................

வெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்கள் எழுதிய தெய்வத் தமிழ்மாலை(வெண்பா அந்தாதி) என்னும் நூலில் எனக்குப் பிடித்த பாக்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.

பெண்பா !



புடைக்க;பொடிக்க;பெருக்க;பொரிக்க;
துடைக்க;சுமக்க;துவைக்க;பழிக்க;
மடிக்க;சமைக்க;மிதிக்க;படுக்க;
வடிக்கமட்டும் தானாபெண் கள்.



மானென்றும்,மீனென்றும்,மின்னலென்றும்,மேகமென்றும்,
வானென்றும்,வேலென்றும்,வேங்கையென்றும்,வேதமென்றும்,
பொன்னென்றும்,பூவென்றும்,பூமியென்றும்,போதையென்றும்,
சொன்னது போதும்பெண் ணை.




கையுண்டு,வாயுண்டு,மூக்குண்டு,நாக்குண்டு,
மையுண்டு,பல்லுண்டு,தோலுண்டு,நாசியுண்டு,
கண்ணுண்டு,காலுண்டு,காதுண்டு,தேகமுண்டு,
பெண்ணுக்கு இதயமு முண்டு.

வெண்படலம் -1

உருண்டை வடிவம்,உருளும் உலகம்;
இருண்ட பயணம், இரவில் உலகம்;
கருத்த முகில்கள், கலங்கும் உலகம்;
அருமையான(து) இந்த உலகம்.



அண்ணாந்து பார்க்கும் உயரம்; தருகின்ற‌
தண்ணீரோ தித்திக்கும் தேனமுதம்;கார்க்கூந்தல்
பெண்களின் எண்ணெயின் மூலம்;கடற்கரை
வெண்மணலில் கண்டால் சுகம்.




இல்லை இவளுக்கு நீதி;இருப்பிடம்
சொல்லும் இவளுடைய சேதி;புராணத்தில்
மட்டும் கடவுளில் பாதி; உரிமைக்குச்
சட்டம்தான் பெண்ணின் கதி.




.....................................................

சிறுவர்களுக்கான‌ பாடல்களை
எளிய வெண்பாவில் சொல்லும் முயற்சி.

மார்கழித் திங்கள்



கொஞ்சி விளையாடும் கோகுலத்துக் கண்ணனைத்
தஞ்சம் அடைந்தாலே போதும் - மணிவண்ணன்
மஞ்சத்தில் பூங்கரத்தில் முத்தத்தில் வாய்ச்சொல்லில்
நெஞ்சம் நிறைந்தால்போ தும்





மகுவாய்ப் பிறந்தான், மகிழ்ச்சியைத் தந்தான்;
சுகந்தனாய் வந்தான், சுகத்தையெல்லாம் ஈந்தான்;
நகுலனாய் வாழ்ந்தான், நமையெல்லாம் வென்றான்;
முகுந்தனே முத்தமொன்று தா.

மார்கழிப் பொழுது



கண்ணனைக் கண்டால் கவலைகள் ஓடிடும்
கண்ணனைப் போற்றினால் குற்றங்கள் நீங்கிடும்
கண்ணனை எண்ணினால் இன்பங்கள் பொங்கிடும்
பெண்களே கண்விழியுங் கள்.




மாவாலே கோலமிட்டு மாதவனைக் கூப்பிடுவோம்
பாவாலே பண்ணிசைத்துப் பாலகனைக் கூப்பிடுவோம்
நாவாலே நாம்பாடி நாதனைக் கூப்பிடுவோம்
வாவா மணிவண்ணா வா.









நாராலே பூவும் சரமாகி மாலையாகும்;
நீராலே மேனி தரமாகி தூய்மையாகும்;
யாராலே ஆன்மா அமைதியாகி வாழும்;சொல்
நாரா யணின்நாமத் தை

கண்ணா...



குழலென்றால் கண்ணன்; குறும்பென்றால் கண்ணன்;
நிழலென்றால் கண்ணன்; நினைவென்றால் கண்ணன்;
எழிலென்றால் கண்ணன்; எழுத்தென்றால் கண்ணன்;
தொழுதிடுவேன் கண்ணா உன்னை.

புரிதல்...

இது எனக்கு மிகவும் பிடித்த கவிஞர் புதுமைத்தேனீ மா.அன்பழகன் அவர்கள் என் பா நூறு என்னும் நூலில் எழுதிய வரிகள்.
இதில் என்ன புதுமை என்றால் ஒரு கவிதையை இருவேறு வடிவங்களில் அதாவது புதுக்கவிதையிலும் மரபுக்கவிதையிலும் பார்க்க முடியும்.அவரின் வலைப்பூவில் இன்னும் பல அற்புதமான புதுக்கவிதைகளையும் மரபுக்கவிதைகளையும் படிக்கலாம்.



நான் புரிந்து கொண்ட‌
முதல் கவிதை - அன்னை

புரிய முயன்ற‌
கவிதை - அப்பா

புரிய முயன்று தோற்றுப் போன‌
கவிதை - மனைவி

புரியாமலேயே போன‌
கவிதைகள் - மக்கள்

நான் மட்டும் என்ன ?
புரிந்தும் புரியாத புதிர்தானே !



புரிந்த முதல்கவிதை பெற்றாள்; முயன்று
தெரிந்தவிடம் தந்தையே; தோற்றவிடம் இல்லாள்
புரியாமல் போன கவிதை புதல்வர்;
புரிந்தும் புரியாத நான்.

கவிதை எனப்படுவது யாதெனின்.......




( படித்ததில் பிடித்தது ‍ - வைரமுத்து அவர்களின் வெண்பாகள் )

புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்கிரண்டு கூட்டம் - ‍எதுகவிதை ?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவருக்குச் சொல்.

*********************************************


வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா - என்தோழா
போதைதர வன்று புதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு.

நண்பா உனக்கொரு வெண்பா



(வைரமுத்துவின் வெண்பாகள் )




போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதை
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்.



ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே பாரடா
வையத்தில் மானுடம் வாழமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா.



ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ .



தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு.



துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த‌
மானுடத்தை வாழ்விப்போம் வா.




பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை ‍- இன்றே
எரியூட்ட வேண்டும் இளையகுலம் வாழ‌
அறிவூட்ட வேண்டும் அறி !

சொல்ல சொல்ல இனிக்குதடா ! முருகா !


முருகா ! குமரா ! குறைதீர்க்கும் எங்கள்
மருகா ! அமரா ! கறைபடியா(து) எங்களைக்
காத்தே அருளுங் கடவுளென் றுன்னைத்தான்
வைத்தோம் ! இருள்நீக் கிடு !





பால்மணம் மாறாத வேலன் ! பழத்தாலே
கோமணம் கொண்டானே ! எங்கள் குமரனவன் !
மண்மணம் வீசும் மலையழகன் ! எங்கள்
தமிழ்மணம் கொண்டகட வுள் !

தமிழும் தமிழன்பன் அவர்களும்

(படித்ததில் பிடித்தது - ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதை வரிகள் )



சீர்நிறைந்த அளவடியும் சீர்கு றைந்த
சிந்தடியும் வெண்பாவில் சேர்ந்தி ருக்கும் !
பாரினிலே நிதிநிறைந்தோர் அதுகு றைந்தோர்
பக்கத்தில் இருப்பதற்குச் சரியென் பாரா ?



முரண், பாட்டில் நயஞ்செய்யும் !
முன்னேறும் நாடோ
முரண்பாட்டில் தேய்ந்தழியும் !



ஒலிகுறைந்த உகரமுயிர் எழுத்துத் தான்ஓர்
ஒற்றெழுத்தாய் மாறாது ! " சந்த னக்கோல்
மெலிந்தாலும் சந்தனத்தான் ! பிரம்பா காது ! "
மேலோர்கள் கொட்டாலும் மேலோ ரேதாம் !




மொழிமுதலில் இடைகடையில் ஒலிகு றைந்தால்
முன்வந்து நெட்டெழுத்தே அளபெ டுக்கும் !
பழிவந்து தன்னினத்தின் புகழ்கு றைந்தால்
பைந்தமிழன் பேராண்மை தலையெ டுக்கும் !




அருங்கவியின் உயிரில்லா எழுத்தை எண்ணி
அலகிடுதல் இலக்கணத்தார் வழக்க மில்லை !
பெருமானம் அற்றவரை எண்ணிப் பார்க்கும்
பிழைச்செய்ல்கள் நுழைபுலத்தார் செய்வ தில்லை !
வருபாட்டில் அசைச்சொல்போல் பயனி ழந்து
வாழ்வதுமோர் வாழ்லாமோ ?

மகளே ! மடியில் வந்து தவழ்ந்திடு !



கொஞ்சும் குரலழகு ! மிஞ்சும் எழிலழகு !
துஞ்சும் ஒயிலழகு ! கெஞ்சும் இதழழகு !
இத்தனையும் காண துடிக்கிறது ! இன்னும்
எத்தனைநாள் சொல்மக ளே !






மடியில் தவழ்ந்திடு என்மகளே ! இங்கே
இடியாய் விழுகிறது வார்த்தைகள் எல்லாம்,
அகமோ அழுது துடிக்கிறது உந்தன்
முகம்காணத் தான்மக ளே !





பெண்ணாய்ப் பிறப்பது மாதவமாம்! இம்மண்ணில்,
கண்ணாய் ! மணியாய் ! நதியாய் ! மொழியாய் !
கதைக்கிறது பெண்ணை, இருந்தும் அவளை
வதைக்கிறது இன்னுமிங் கே !






மணந்த உடனே கருத்தரிக்க வேண்டுமாம்
கண்ணே ! இ(ல்)லையெனில் கண்ணீர்த்தான் - மங்கைக்கோ
இங்கே மலடியெனும் பட்டம்,மணந்த
சிங்கமோ மார்த்தட்டிக் கொண்டு.






( நன்றி அகரம் அமுதா அவர்களே )

வேடிக்கையான வெண்பா

( படிக்கவும், சிரிக்கவும் மட்டும் )

வள்ளுவர் வீட்டில் இருக்கையில் வாசுகியார்
மெள்ள நடக்கிறார் ஏனென்றால் - உள்ளே
திருக்குறட் பாவெழுதிக் கொண்டிருக்கும் போது
குறுக்கிட்டால் கோபம் வரும்.




( படித்ததில் பிடித்தது - சுசாதா அவர்கள் எழுதியது )

அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 4

பாக்களைப் பருக , படிக்க
1.முதல் ; 2.இரண்டாம் ; 3. மூன்றாம்





அடக்கும் உபாயம் அறிந்தேயான் வந்தேன் !
மடக்குற வள்ளி மணாளா ! - இடபால்
இருக்கின்ற தேவானை என்கின்ற காட்சி,
தருகின்ற இன்பம் தனி !




தனித்தெய்வம் நீயென்பேன் ! - தண்பரங் குன்றம்
இனித்த வகையறிவேன் எந்தாய் ! - குனித்த
புருவமும் செவ்வாய்க் குமிழ்ச்சிரிப்பும் கொண்ட
முருகா வருகவென் முன்.




முன்வரத் தீவினைதான் மூண்டெழு மாமுருகா ?
உன்வேலைக் கண்டவுடன் ஓடுமே ! - என்னிறைவா !
ஐயன் அருணகிரி ஆவேனோ என்பாயா ?
பையப் பெறுவேன் பணிந்து !



பணிந்து பணிந்து பகலிர வின்றித்
தணியா மனத்தைத் தருவேன் ! - அணிமா
மயிலும் அயில்வேல் படையும் உடையாய் !
உயிரில் கலந்த உணர்வு !



உணர்வில் கலந்தாய் ! உயிரில் கலந்தாய் !
கணபதியின் தம்பியே கந்தா ! - மணவழகா !
ஞானக் குழந்தையே ! நான்மறை நாயகனே !
ஊனக் குழந்தை உனக்கு !



உனக்கென்றும் நானடிமை ! உன்னைத்தான் விட்டால்
எனக்கென்றிங் காருந்தான் இல்லை ! - மனம்நிறைந்தாய் !
எங்கள் குலவிளக்கே ! எந்தை சிவபாலா !
தங்க மகனேநீ தாங்கு !



தாங்கும் தனிவேலும் தக்ககொடிச் சேவலுமே,
ஏங்கும் துயர்போக்கும் ஏதுக்கள் ! - ஓங்கு
பழமுதிர் சோலை மலைக்கிழவா ! நீதான்
அழவைக்க லாமோ அறி !




இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.