வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

வள்ளுவரும் வாலியும் -2

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (குறள் 45)


இல்லறம் - என‌
இயம்பப் பெறும் -

வாழ்க்கை
வயலில் ...

அன்பும் அறனும் விதைநெல் ;
பண்பும் பயனும் விளைநெல் !



அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்றை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். (குறள் 185)


அறம்பேசும் நெஞ்சம்
அதுவல்ல என்பதை - அது
புறம்பேசும் நேரம்
புரிந்து கொள்ளும் மன்பதை !



அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)


பொறாமையைப் -
பொடி;
அவாவை -
அடி;
வெகுளியை -
விடு ;
சுடு சொல்லைச் -
சுடு ;

நான்கும்
நான்கு தீங்கு ;அவற்றின்
நிழலில்
நிற்காமல் நீங்கு !

நான்கையும் புறம் - தள்ளி
நடத்துதல் அறம் !


கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. (குறள் 356)


மெய்கண்டாரிடம் செல் ;
மெய்ப்பொருளைக் கல் !

பிறக்கையில் ஒரு குழி ;
இறக்கையில் ஒரு குழி ;

இவை
இரண்டையும்
தவிர்த்திடத்
தென்படும் ஒரு வழி !

வள்ளுவரும் வாலியும் -1



எவ்வளவோ பேர் திருக்குறள் விளக்கம் எழுதிவிட்டாலும், வாலியின் வசன வடிவில் எழுதிய கவிதையுரை படித்துப் பாருங்கள். வார்த்தையில் விளையாடி இருப்பதைக் காணலாம்.





காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. ( குறள் எண் : 122 )


அடக்கம் என்பது
அரும்பொருள் ; கட்டிக் கா ;
அதனிலும்
அரும் பொருள் கிடைக்கா !




மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. ( குறள் எண் : 65 )


உடலுக்கு இன்பம் - நம் சேயின்
விரல் படல் ; நம் -
காதுக்கு இன்பம் - நம் சேயின்
குரல் படல் !




சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. ( குறள் எண் : 267 )


வெப்பம் கூடக்கூடச்
செப்பம் ஆகும் தங்கம் ;
வருத்தம் கூடக்கூடத்
திருத்தம் ஆகும் தவம் !




நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். ( குறள் எண் : 334 )


நாள் ஒரு
வாள் ; அது
வாழ்வை அரியும் - என‌
வாலறிவு அறியும் !




பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. ( குறள் எண் : 347 )


ஒட்டிக் கொள்ளும் ஆசைகளை
உதறுக; உதறாவிடில் -
கட்டிக் கொள்ளும் கவலைகள் ;
கதறுக !





காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )


சின்ன உதவி
செய்தாலும் ;அது -
என்ன உதவி
என்றாலும் ;

அதை
அவன் -
காலத்தில் செய்ததைக்
கவனி ;
அதைவிடப் பெரியதல்ல - இவ்
அவனி !

நண்பா உனக்கொரு வெண்பா



(வைரமுத்துவின் வெண்பாகள் )




போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதை
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்.



ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே பாரடா
வையத்தில் மானுடம் வாழமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா.



ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ .



தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு.



துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த‌
மானுடத்தை வாழ்விப்போம் வா.




பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை ‍- இன்றே
எரியூட்ட வேண்டும் இளையகுலம் வாழ‌
அறிவூட்ட வேண்டும் அறி !

சொல்ல சொல்ல இனிக்குதடா ! முருகா !


முருகா ! குமரா ! குறைதீர்க்கும் எங்கள்
மருகா ! அமரா ! கறைபடியா(து) எங்களைக்
காத்தே அருளுங் கடவுளென் றுன்னைத்தான்
வைத்தோம் ! இருள்நீக் கிடு !





பால்மணம் மாறாத வேலன் ! பழத்தாலே
கோமணம் கொண்டானே ! எங்கள் குமரனவன் !
மண்மணம் வீசும் மலையழகன் ! எங்கள்
தமிழ்மணம் கொண்டகட வுள் !

கவிஞர் கவி சோதி அவர்களின் கவிதை


நாங்கள்
சேற்றில்
கால்
வைக்காவிட்டால்

நீங்கள்
சோற்றில்
கை வைக்க முடியாது.


---------------------------------------
கவிதையை ஆழமாக பார்த்தால் இருவேறு பொருள் உள்ளதைக் காணலாம்.இது தான் வார்த்தை விளையாட்டு கவிதை என்பது.

------------------------------------


1.சேறு என்று எழுதி இடையில் கால்(ர) வைத்தால் தான்,சோறு என்னும் சொல் கிடைக்கும்.

2.உழவுக்கூலித்தொழிலாளி தன்னுடைய காலைச் சேற்றில் இறங்கி,ஏர் உழுது,நாற்று நட்டு,உரம் வைத்து, வேலி கோலி,களை எடுத்து,பயிர் வளர்ந்து, அறுவடை செய்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

காரணம் - காரியம்

ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (Karya)என்னும் வேற்றுமொழிச்சொல்லும் காரணம்,காரியம் என்று தமிழில் திரிந்தாகக் கூறுவார்கள்.காரண காரியம் என்பதை தூண்டுதலும் துலங்கலும் Cause and Effect எனக் கூறலாம். ஒரு செயலைச் செய்வதற்கான மூலம் (Essential element) தேவைப்படுகிறது.அம்மூலத்தின் விளைவாக செய்கை (Action) நிகழ்கிறது.காரணம்,காரியம் என்னும் சொற்கள், தமிழ்ச்சொற்கள் என்பதை விரிவாக காணலாம்.

மழை பெய்வதால் ஏரி,குளம் போன்ற நீர்நிலைகள் நிறைகின்றன.இது காரியம் ஆகும். நீர்நிலைகள் நிறைய முகில் கூட்டங்களே மூலமாய் உள்ளன. இது காரணம் ஆகும்.எளிமையான இந்த எடுத்துக்காட்டில் அடங்கியிருக்கும் ஆழமான பொருளை நோக்கலாம்.கார் என்பது, மழை,முகில் என்ற பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லாகும்.



கரு ‍- கருமை - கார் என விரியும்.
கார்காலம் = மழைக்காலம்
கார்முகில் = கரியமுகில்
கார் என்னும் தமிழ்ச்சொல்,சொல்லப்படும் இடத்திற்கேற்றவாறு,முகில்,மழை என்னும் பொருள் கொள்ளப்படும்.

அணம் என்ற சொல்லுக்கு உயர்வு,மேலே (Up,High)என்றவாறு தமிழில் பொருளுண்டு.
அன் என்ற மூலச்சொல்லின்று அணம்,அணா,அன்னம்,அண்ணி,அண்ணன்,அண்ணல் போன்ற சொற்கள் விரிவடைகின்றன.

அணா - அன்னம் : மேல்வாய்
அண்ணன் - உடன் பிறந்தவரில் மூத்தவர்
அண்ணல் - உயர்ந்தவர்
அணிகம் - உயர்ந்த பல்லக்கு
அணா -அணி :உடலின் மேலே அணியும் ஆடை,நகை

கார்+அணம்

கார் - முகில்
அணம் - மேலே
மேலே உள்ள முகில் கூட்டம் மழை பெய்ய காரணம் ஆகிறது.

அயம் என்பது நீர்நிலை,குளம்,ஏரி என விரியும்
கார் அயம் = நீர் நிறைந்துள்ள குளம்.

யா என்பது நீரைக் குறித்த தொல்தமிழ்ச்சொல்லாகும்.
யா - யம் - அயம் என விரிந்தது.

அயம் = தமிழில் சொல்லப்பட்ட நீர்நிலைக்கான சொல்.

யம் (Yam) = ஏரி,கடலைக் குறித்த எகிப்தியச்சொல்.

யா(Ea) = கடலைக் குறித்த பாபிலோனியச் சொல்.

யா என்றே தொல் தமிழ்ச்சொல்லின்றே , யம் - அயம் போன்ற சொற்கள் விரிந்தன.

கார் அணம் = நீர் தோன்றுவதற்கான மூலம் ( Cause,Origin,Source)

கார் அயம் = மூலத்தின் செயல்பாட்டு விளைவு (Operation)

வானத்தில் கார் முகில் தோன்றுவது காரணம்

நிலத்தில் மழையாகப் பொழிவது காரியம்

கார்+அயம் என்பது காரயம் எனப்படும்.
காரயம்,காரியம் எனவும் திரியும்.

மழையும்,முகிலையும் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு உருவான தமிழ்ச்சொற்களே காரணம், காரியம் என்பனவாகும்.

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )