வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

௬.உரிமை ஊதியமும் ( Royalty ) , ஊதியக் கவிதைகளும்

" Royalty " என்னும் ஆங்கிலச்சொல்லை நாம் நன்கு அறிவோம். நூலாசிரியருக்கு வழங்கப்பெறும் தொகையை அது குறிகின்றது. ஊதியத்தில் ஒரு பங்கு என அகராதிகள் கூறுகின்றன். எழுத்தாளருக்கு உள்ள உரிமையை இது விளக்க வில்லை. நூலாசிரியருக்கு ஊதியப் பெற உரிமை உண்டு என்பதை உணர்த்துகிறது. ஒரு அலுவலகத்தில் " Royalty "
என்னுஞ் சொல்லுக்கு உரிமை ஊதியம் என்பதைப் பயன்படுத்துவதைப் பார்க்கும்பொழுது அளவிலா மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இது ஏற்ற சொல் இல்லை என்று சொல்லுபவருக்கு கூறுவது இது தான்.

எடுத்த எடுப்பிலேயே நல்ல மொழிபெயர்ப்புகள் கிடைத்து விடமாட்டா. அவை காலப்போக்கிலே
அரும்பாகி மொட்டாகி மலராகும். பிஞ்சாகிக் காயாகிக் கனியாகும். புளிக்குங்காய் இனிக்கும் பழமாக மாறிவிடும் !

" கலெக்டர் " என்னும் சொல்லை எடுத்துக் கொள்வோம்." தண்டல் நாயகம் " என்னும் பெயரை அமைத்துத் தடுமாற்றம் அடைந்தோம். பின்னர் அது படிப்படிப்பாக " மாவட்ட ஆட்சித்தலைவர் " என்று மாறியது. அது இன்னும் " மாவட்ட ஆட்சியாளர் " என்னும் நல்ல மொழிபெயர்ப்பாக ஆகியது. மேலும் சுருங்கி, " மாவட்ட ஆட்சியர் " என்று ஆகின்றது.

( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )


" Royalty " என்பதை நினைக்கும்பொழுது நினைவிற்கு வரும் சொல் " Alimony ".
அதை பாரமரிப்புத் தொகை ( ஜீவானம்சம் ) என்று அழைப்போம். இரண்டுமே ஊதியம் பெற இருக்கும் உரிமையை உணர்த்தும் சொற்கள்.

முயற்சி செய்வோம்.காலம் இரண்டிற்மே இதைவிட அழகான சொற்களைத் தரும் என்று நம்புவோம்.

ஊதியம் என்றது ஒரு சில கவிதைகளை நினைவிற்கு வருகிறது.

முதலாவது இரவி செல்லத்துரையின் வரிகள்

இறைவனோ உலகத்தின் படைப்பாளி
உழைப்பவனோ உலகத்தின் படைப்பாளி
முதலிட்டு உழைப்பவனோ முதலாளி
வியர்வை சிந்தி உழைப்பவனோ தொழிலாளி
நாட்டுக்காய் உழைப்பவனோ போராளி
கல்வியில் உயர்பவனோ அறிவாளி
உழைக்காமல் உறங்குபவன் கடனாளி
உறக்கத்தில் வாழ்பவனோ நோயாளி
சுயசிந்தனை அற்றவனோ ஏமாளி
சிந்திக்க தெரியாதவன் கோமாளி
உழைத்து வாழ்பவனோ பலசாலி
உழைப்பாளி உலகத்தின் படைப்பாளி
படைப்பாளி உலகத்தின் உழைப்பாளி

இரண்டாவது என்னுடைய வரிகள்,

உத்தமர் என்றால்
உதாரணம் அடுக்கிடுவார்கள்
உண்மையாய் வாழ் என்றால்
உன் வேலையைப் பார் என்றிடுவார்கள்
உழைப்புக்கு ஏற்ற
ஊதியம் என்றிட்டால்
உண்மையும்
உழைப்பும்
ஊமையடா என்றிடுவார்கள்
இது பொல்லாத உலகமடா
பொய்யும் புரட்டும்
செய்யும் வேலையடா என்றிடுவார்கள்

முன்றாவது Shylaja அவர்களின் வரிகள் ( ஒன்றும் புரியவில்லை! )

வருவது என்ன
எதுவும் புரிவதில்லை
உழைப்பு ஒருபக்கம்
ஊதியம் வேறு பக்கம்
காயங்கள் ஓரிடம்
மருந்துகள் வேறிடம்
பிரார்த்தனைகள் ஓரிடத்தில் நடக்க
வரங்கள் இன்னொரு இடத்தில் பெறப்படுகின்றன
கேள்விகள் கேட்பது ஒரு வாசலில்
பதில்கள் வருவது மற்றொரு வாயிலில்
நீரின் சுவையை வேர்கள் பருக,
வளர்வதென்னாவோ செடிகள்தானே?
எதிர் எதிரே இருந்தாலும்
வானின் நிறத்தை
மண்தான் அறியுமா?
வாசல்கள் எதற்கு
கதவுகளின்றி?
ஒன்றும் புரியவில்லை!

௫.வாழ்த்தொப்பம் ( AUTOGRAPH )
பல்வேறு துறையில் சிறந்து விளக்கும் பெரியோர்களிடம் கையெழுத்து வாங்குவதில் அனைவருக்கும் ஆர்வம் உடையவர்களாக இருக்கிறார்கள்.
கையெழுத்து வாங்குவதற்கென்றே கடைகளில் எழில்மிகு குறிப்பேடுகள் கிடைக்கின்றன். அவை அதிக விலை என்றாலும் யாரும் அயர்ந்து போவதில்லை.
விலையேற்றம் எப்பொழுதும் அவர்களுக்கு தடையாக அமைவதில்லை. கையெழுத்து வேட்டை என்பது கற்றறிந்தவர்களிடம் நடத்துவதைவிடக் கலைஞர்களிடந்தாம் மிகுதியாக நடத்துகின்றார்கள். அதிலும் திரைப்படக் கலைஞர்கள் என்றால் தான் அவர்களுக்குத் தித்திப்பானவர்கள் !

" AUTOGRAPH " என்னும் ஆங்கிலச் சொல்லிற்கு நல்லதொரு தமிழாக்கம் தேவையன்றோ ? " AUTOBIAGRAPHY " என்னும் சொல்லை நாம் " தன் வரலாறு "
என்று மொழியாக்கம் செய்கின்றோம். அப்படி என்றால் " AUTOGRAPH " என்பதை எவ்வாறு அழைப்பது ?

" HANDWRITING " - கையெழுத்து

" SIGNATURE " - கையொப்பம்

அதிகமாகப் படித்தவர்களும் , அரைகுறையாகப் படித்தவர்களும் புரியாத கையொப்பங்களைப் போட்டுத் தருவார்கள். இரண்டுமே கிறுக்கல்களாகத் தாம் இருக்கும். "AUTOGRAPH " யும் பெரும்பாலும் இந்த வகையில் தான் இருக்கும். ஆயினும் அந்தக் கிறுக்கல்களிலும் அன்பு இழைகளின் பெருக்கல்களைக் காணலாம்.

"AUTOGRAPH " என்றால் " தன் கையொப்பம் " என்று சொல்லலாமா ? என்பதுதான் எழுகின்ற வினாவாகும். கையொப்பம் என்னும் சொல்லை "ஒப்பம்" என்று சுருக்கி விடலாம். இவ்வாறு சுருங்குவதைப் பல்வேறு ஆவணங்களில் நாம் கண்டு வருகின்றோம். "AUTOGRAPH " இட்டுத் தருபவர்கள் , வாழ்த்து ஒன்றையும் இணைத்து அதனடியில் கையொப்பம் இடுவார்கள். வாழ்த்துச் செய்தி எழுதுவதற்குச் சிலருக்கு நேரம் இருப்பதில்லை. வெறுங் கையொப்பம் மட்டும் இட்டு விட்டு நடந்துவிடுவார்கள் ! அவ்வாறு வெறுங் " கையொப்பம் " மட்டுமே இட்டுத் தந்தாலும்கூட அதுவும் வாழ்த்துந்தான். எனவே "AUTOGRAPH " என்பதை
" வாழ்த்து கையொப்பம் " என்று அழைப்பதுந்தான் பொருத்தமாக இருக்கும்.

" Initials " என்பதற்குச் சுருக்கொப்பம் என்று சொல்கின்றோம்.
"Authentication "---- என்பதை" உறுதியொப்பம் " என்று வழங்குகின்றோம். இதே முறையில் "AUTOGRAPH " என்னும் சொல்லிற்கு " வாழ்த்தொப்பம் " என்னும் மொழியாக்கமே ஏற்ற மொழியாக்காகவும் இனிய மொழியாக்காகவும் இருக்கும்.


" HANDWRITING " - கையெழுத்து

" SIGNATURE " - கையொப்பம்

"AUTOGRAPH " - வாழ்த்தொப்பம்

" AUTOBIAGRAPHY " - தன் வரலாறு

"Authentication " - உறுதியொப்பம்

" Initials "-- சுருக்கொப்பம்( கோ.முத்துப்பிள்ளை அவர்களின் மொழிபெயர்ப்பு வேடிக்கைகள் என்னும் நூல் இருந்து )

௪.அறிவோம் பயன்படுத்துவோம் - 1

சொற்களை அறிந்துக்கொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தில் மட்டுமல்ல, வாழ்வியலும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரை தான் இது.வட்டாரச் சொற்கள்
சொல்லும்பொழுது உண்டாகும் உற்சாகமும் உணர்வும் உரைப்பதற்கு இல்லை.அந்த வகையில்
பல நெல்லை வட்டாரச் சொற்களை இந்தப் பகுதியில் பார்ப்போம்.


1.மட்டி


நமக்கு தெரிந்த " டி " முடியும் சொற்கள் என்றால் வட்டியும் குட்டியும் தான்.
மட்டி என்றால் கீழ் உதட்டின் கீழ்ப்பகுதி என்று பொருள்.பயன்படுத்தும்பொழுது மட்டியைக் கடிக்காதே என்று இயம்பலாம்.
2.நெடுப்பம்


நீளம் என்ற சொல் நாம் அனைவரும் அறிந்த சொல். நெட்டை என்பது நாம் நினைவிற்கு வரும் மற்றொரு சொல்.அதை உயரத்தைக் குறிக்கும்பொழுது நெட்டையான மரம் என்றும், நெட்டையான மனிதன் என்றும் உரைப்பதுண்டு. ஆனால் நெடுப்பம் என்பது நீளமானது என்ற பொருளைத் தரக் கூடியது.எடுத்துக்காட்டாக கயிறு நெடுப்பமாக இருக்கிறது என்று சொல்லுவதுண்டு.
3.வாலம்


வால், வானம் என்பதை போன்று " வா " தொடங்கும் சொற்கள் இதுவும் ஒன்று.
வாலம் என்றால் செவ்வக வடிவத்தில் அதாவது அகலம் குறைவாகவும் நீளம் அதிகமாகவும்
இருப்பதை போன்றதைக் குறிப்பது ஆகும்

பேச்சு வழக்கில் இடம் வாலமாக இருக்கிறது என்று விளம்புவதுண்டு.
4.சமுக்கம்


சமம், சமன்பாடு,சதுரம் என்ற வரிசையில் பிறந்த சொல்.சமுக்கம் என்ற சொல்லைச் சொல்லும்பொழுது நாம் நினைவிற்கு வரும் மற்றொரு சொல் கமுக்கம் ( இரகசியம் ).
சமுக்கம் என்றால் சதுர வடிவத்தில் இருப்பதைத் தெரிவிப்பது.சொல்லும்பொழுது இடம் சமுக்கமாக இருக்கிறது என்று உரைப்பதுண்டு.

௩.Tyre (வண்ணல் அல்லது வண்டாரம் )
வட்ட வடிவக் கருத்தைக்கொண்டு,

1.வட்டில்

2.வளையல்

3.வளையம்

4.வட்டம்

5.வட்டாரம்

முதலிய சொற்கள் பிறந்தன.

ஆங்கிலத்தில் "Tyre" என்கின்ற சொல்லை வட்ட வடிவத்தைக் கொண்டோ அல்லது காற்று
வைத்தோ மொழியாக்கம் செய்யமுடியும் அல்லது வண்டி என்ற சொல்லுடன் ஒட்டு சேர்த்து கூட உருவாக்க முடியும்.

எடுத்துக்காட்டாக

வண்ணல் என்றோ அல்லது வண்டாரம் என்றோ மொழியாக்க செய்யமுடியும்.

௨.Alarm - அலாரம் ( ஓசை ஒத்த சொற்கள் )
Alarm என்ற சொல்லை அலாரம் என்று மொழியாக்க செய்யலாம்.

அலறல் என்ற சொல்லில் வருகின்ற அல் என்ற வேர் எடுத்து, கூடாரம் போன்ற சொற்களில் வரும் ஆரம் ஓட்டுவை இணைத்து அலாரம் என்ற சொல்லை உருவாக்கலாம்.

கடிகாரத்தில் அலாரம் வை என்று உரைக்கும்பொழுது எத்தனை இனிமையாக உள்ளது.
அதாவது ஆங்கிலத்தில் No Life without Wife என்பதை போல்

௧.shampoo -சீம்பூ ( ஓசை ஒத்த சொற்கள் )ஓசை ஒத்த சொற்களை உருவாக்கவது கூட மொழி நன்மை நல்கும்.ஏனென்றால் பழக்கப்பட்ட சொற்களை விலக்குவது அவ்வளவு எளிதானது அன்று.

பாராளுமன்றம் ( Parliament ) என்று விளம்பும்பொழுது வேறுபாடு காண முடியாது
ஆனால் "பாராளுமன்றம் " பிரித்து படித்தால் பொருள் விளங்க முடியும்.

சீப்பு- தலை முடியை வாரவதற்கு

சீக்காய்- தலை முடியை பாதுகாக்க

சிகையலங்காரம் -தலை அலங்காரம்

"Shampoo" என்பது தலைமுடியை மென்னையாக்க உதவுவது என்று எடுத்துக் கொண்டால்
சீம்பூ என்று மொழியாக்கம் செய்ய இயலும்.

சீம்பூ -தலை முடியை பூ போன்று வைப்பது