வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

கா(த)லி....

வார்த்தை விளையாட்டுக் கவிதைகளைக் காணும்பொழுது என்னுள் விளைந்த விளைவே இநதக் கிறுக்கல்
உழைப்பைக் " காதலி " , அங்கே
வறுமை " காலி " ஆகும்.

அன்பைக் " காதலி " , அங்கே
வெறுப்பு " காலி " ஆகும்.

நம்பிக்கையைக் " காதலி " , அங்கே
பயம் " காலி " ஆகும்.

மனிதனைக் " காதலி " , அங்கே
மதம் " காலி ' ஆகும்.

மகிழ்ச்சியைக் " காதலி " , அங்கே
துக்கம் " காலி " ஆகும்.

முயற்சியைக் " காதலி " , அங்கே
முட்டுக்கட்டைகள் " காலி " ஆகும்.

நட்பைக் " காதலி " , அங்கே
விரோதம் " காலி " ஆகும்.

அடக்கத்தைக் " காதலி " , அங்கே
மமதை " காலி " ஆகும்.

அமைதியைக் " காதலி " , அங்கே
சச்சரவுகள் " காலி " ஆகும்.

இறைவனைக் " காதலி " , அங்கே
சஞ்சலம் " காலி " ஆகும்.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 4

சூறாவளியால் எண்ணற்றோர் பலி
எவ்வளவு நிவாரணம் கொடுத்தாலும் தீராது
பாதிக்கப் பட்டோரின் வலி.

யானையின் பலம் தும்பிக்கை
வாழ்க்கையில் வெற்றி கிட்டும் வரையில்
நமக்கு வேண்டும் நம்பிக்கை.


வங்கிகள் கொடுக்கும் கடன்
வட்டிக் கணக்கை பார்த்த பின்னே
வேதனை வந்திடும் உடன்.

தஞ்சையில் அன்று தானியம்
செழித்தது காவிரி இன்று மணலாய்
உழவன் கெஞ்சுவது மானியம்.

குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3

இனிய மழலைப் பேச்சு
எப்பொழுதும் தோற்றுப் போகிறது.
என் மொழி வீச்சு.

உறங்க வில்லை மரங்கள்
உதிர்ந்த இலைகள் எல்லாம் அவற்றின்
பறிபோன பச்சை வரங்கள்.


மலையில் இருந்து அருவி
விழுவதைக் கண்டு தயங்குகிறது
குளிக்க நினைத்த குருவி.


நீண்ட கடற்கரை
ஆங்காங்கே படிந்துள்ளது
பொங்கிய கடல்நுரை.குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

ஞாபக சுவடு!

* நீரோடை நின்று போக
சாபமிடு!

* நித்தம் மலரும் பூக்களை
உதிர்த்து விடு!

* நிலவைப் பறித்து
எங்காவது தொலை!

* நட்சத்திரங்களை
கொட்டிப் புதை!

* விதியே...
இதில் எதைப் பார்த்தாலும்
வருகிறது
அவள் ஞாபகம்!

( படித்ததில் பிடித்தது - — தமிழ் நாயகி அவர்களின் வரிகள் )

நன்றி ; வாரமலர்

குறிப்பு ; படம் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.

சோடித்தல்
(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )

பெண், மாப்பிள்ளைகளைச் சோடிப்பது, " திருமணத்தன்று " நிகழ்வது. அழகுசெய்வது, புனைவது இவையே, " சோடித்தல் "சொல்லிற்குப் பொருளாக இருக்க முடியும்.

நிலத்தில் நடக்கும்போது பாதம் பதிந்துவிடுகின்றது. இந்தப் பதிவு சுவடு எனவும் சொல்லப்படும், வண்டிகள் மண்தரையை அறுத்துக்கொண்டு சொல்கின்றன; அங்கும் சுவடு தோன்றுகிறது. இந்த வண்டிச் சுவடு, பேச்சு வழக்கில் சுவடு - சொவடு - சோடு - சோடை - சோட்டை என்று ஊர்தோறும் பேசப்படுவதுண்டு. வண்டியைச் சோட்டையில் பார்த்து ஓட்டு என்று சிற்றூர் மக்கள் பேசுவர்.

பதிவு என்று பொருளுடைய " சுவடு " ச் சொல்லின் வழி வந்ததே இந்தச் சோடித்தல் சொல்லும். ஒர் அழகான பெண்ணை மனத்தில் வைத்துக்கொண்டு, மணவறையில் அமர்ந்திருக்கும் பெண்ணை அழகுசெய்கின்றோம். மனத்திலிருக்கும் சுவடு அதாவது பதிவு பெரிது ; அதை நோக்கியே இங்குப் புனைவு செய்யப்படுகின்றது. சுவடு - சுவடிப்பு - சோடிப்பு என்பதே இச்சொல்லின் வரலாறு.

நாம் ஒருவரிடம் வெற்றோலையையும் எழுத்தாணியையும் கொடுத்து பிறிதொரு ஓலையில் உள்ள வரிகளை அப்படியே எழுதித்தரும்படி கேட்கிறோம். அவர் அப்படியே, முன்னிருந்த ஓலையில் உள்ளதை உள்ளபடியே பார்த்து எழுதிக் கொடுத்துவிடுகின்றார். இவ்வாறு புதிதாக எழுதிக்கொடுத்த ஓலைக்குத்தான் " சுவடி " என்பது பெயர். முந்தைய ஓலையின் சுவடு, அப்படியே புத்தோலையில் பதியப்பட்டதல்லவா !முன்னிருந்த ஒரு பொருளைப் பார்த்து அப்படியே செய்வதை ஆங்கிலத்தில் " Duplicate " எனக் கூறுகின்றோம். ஒன்றிலிருந்து பிறிதொன்று வரும்போது , ஒரு பொருள் இரண்டாகிவிடுகின்றது. இதனால்தான் இரண்டு என்று பொருள்தரும் " Duo " என்ற சொல்லிலிருந்து இந்த " Duplicate " என்ற சொல் வருவதாயிற்று.


Duplicate - like its close relative double, Duplicate comes ultimately from Latin duplus -
" two fold ", a compound adjective based on Latin " Duo " - two.
Dictionary of world origin

முன்னிருந்த சுவடாகிய பதிவிலிருந்து பின்னமொரு பதிவு வந்தால், இப்பொழுது பொருள் இரண்டாகிவிடும் அல்லவா ? . இந்த வகையிலேயே தமிழில் சுவடுச் சொல் சுவடு - சொவடு - சோடு - சோடி என இரண்டு பொருள்தரும் சொல்லையும் ஈன்றது. இருவராய் இருக்கும் மணமக்கள் சோடியாவதும், இரண்டாயிருக்கும் மிதியடி சோடு ஆவதும் எல்லாம் " சுவடி " வழி வந்தனவே.
சுவடி, சோடி, சோடிப்பு என்ற சொற்களுக்கெல்லாம் இப்படி தெளிவான வரலாறு இருக்க, ஜோடி, ஜோடிப்பு, ஜோடனை என்றெல்லாம் வாய் கோணித் தமிழன் பேசலாமா ?

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 2

பெண்ணுக்கு மூக்கு சப்பை
சொன்ன மாப்பிள்ளைக்கு
பெருத்து இருந்தது தொப்பை

பேருந்தில் போட்டார்கள் பாட்டு
கேட்ட சுகத்தில் தூங்கிப் போய்
வாங்க மறந்தேன் சீட்டு.

சாலை முழுவதும் மழைநீர்
முறையாக நாம் சேமித்தால், அதுவே
நாளை நமக்கான குடிநீர்.

கடத்தல் பொருள் பறிமுதல்
காணாமல் போனது
பாதுகாப்பில் பாதி முதல்.

குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

எனக்குப் பிடித்த ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1

நடுநிசியில் குழந்தையின் சத்தம்
கணவனுக்கு கிடைக்கவில்லை
மனைவியின் ஆசை முத்தம்


சிறுமிக்கு கூட திருமணம்
இன்னும் திருந்தாத மடமை மக்கள்
கைம்பெண்ணுக்கு மறுக்கிறார் மறுமணம்.
தூரிகையெடு துளி மைத் தொடு
உயிரைத் தந்து உணர்வைக் கலந்து
ஓவிய மாக்கிக் கொடு.

நீரின்றி காயும் ஆறு
நித்தம் மணலெடுத்து குழி பறிக்கும்
மணல் வண்டி நூறு.

குறிப்பு : படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. ஓசை ஒத்தப்பாக்கள் அனைத்தும் நான் மிகவும் இரசித்த பல கவிஞர்கள் எழுதியவை.

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 1

துளிப்பா ( Haiku ) க்கு அடுத்து அடி எடுத்து வைத்து தான் ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) .

இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.


இதோ என்னுடைய சில ஓசை ஒத்தப்பாக்கள் ( Limeriaku ).
உங்களின் பார்வைக்குவேதங்கள் முழங்க ஒலித்தது மந்திரம்
வேடிக்கை பார்த்தான் தமிழன், நடந்தது
வேள்வியில் தமிழை அழிக்கும் தந்திரம்


ஆரம்பம் ஆனது வாக்கு வேட்டை
கிடைத்தது என்னவோ
கடைசியில் மக்களுக்கு நெற்றியில் பட்டை.


வீட்டை விட்டு வனவாசம்
விதியை வெந்து என்ன பயன் ?
மதியை இழந்ததால் சிறைவாசம்.


பூக்களைக் கண்டு
தேன் எடுக்க துடிக்கிறது
வாலிப வண்டு.


பறந்தது உயிர்ப்பறவை
கூட்டை விட்டு, மறந்தது
தன் உறவை.

குறிப்பு ; இந்த இடுகையிலுள்ள படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து எடுக்கப் பட்டவை.

சுட்ட பழமா??? சுடாத பழமா???

( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி
அவர்கள் " சுயம் " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )அவ்வைக்கும் தமிழுக்கும்
ஆயிரம் காலமாய் உறவுதான்...

தமிழ்க்கடவுளோடு
தர்க்கம் புரிந்து
சுட்ட கனி கொடுத்த‌
சூட்சுமம் இரசிக்கலாம் தான்...
என்றாலும்
தமிழ்ப்பாட்டி நினைவாக‌
தமிழ்க் கடவுள் சாட்சியாக‌
இன்றைக்கும் சிலர்
சுட்டகனிக்குப் பதிலாக‌
சுட்டகவிதை தருவதால்...
அப் போலிகளின் பெயரால்
ஏற்கனவே வெளிவந்த‌
எல்லா கவிதைகளின் மீதும்
எழுகிறது ஐயம்...
நம்மை...
சொக்க வைத்த பல கவிதைகள்
சுயம் தானா அல்லது
அவையும் இவைபோலவே
சுட்டவைதானா என்ற வினாவோடு!

வயதின் வேதனை( Thanks : Images - www.coloring-pages-kids.com/ )

வயதாகி விட்டால் வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய தானே என்று முதியோர்களை முணுமுணுக்கும் வார்த்தைகள் வயதின் வேதனையை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றது.

இன்னும் ஒருபடி மேலாக,

"

வயதாகி விட்டால்
வயோதிகருக்கு
வளர்ந்துவரும் சமுதாயம்
வழங்குவது
வளர்த்துவிட்ட
முதியோர் இல்லமா ?
" என்பதும்,

"
வயோதிகம் கடிகாரமாய்
துடித்துக் கொண்டிருக்கிறது
இன்னொரு நாளைப்
பார்த்துவிடும் உயிர்ப்புடன் " ( நன்றி அனுஜன்யா அவர்கள் )

என்னும் வரிகளும் உள்ளத்தில் வலியை ஏற்படுகிறது என்பது உண்மை.

வயதுக்கே இத்தனை வலி என்றால், அச்சொல்லையே வேற்றுமொழிச் சொல்லாக வரையறுத்த கொடுமையை என்னவென்று இயம்புவது ?

வாழும் உலகத்தை வையம், வையகம் என்று எல்லாம் அழைக்கின்றோம்.
வையத்திற்கும்,வாழ்விற்கும் ஆதாரமானது உழவுத்தொழில்.அதனால் தான் வான்புகழ் வள்ளுவரும்,

"
சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை " என்றார்.

உணவிற்கும்,விளைச்சலுக்கும் உறைவிடமாக விளக்கும் நிலத்தை வைத்திருந்த காரணத்தாலே வை - வய் - வயல் என்று அழைக்கப்பட்டது.அது மட்டுமா?


உணவு உட்கொள்கின்றோம்.அது உள்ளே சென்று ஒரு இடத்தில் வைக்கப்படுகின்றது.அந்த வைக்கப்பட்ட பகுதியே வை - வய் - வயிறு என்று கூறப்பட்டது.

வயிறு பற்றி வள்ளுவர் கூறுவதைக் கேட்டால் இன்னும் வியப்பின் விளம்பிற்கே இட்டு செல்லும்.

"
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி " என்பார்.

இதன் பொருள் என்னவென்றால்,

பொருளை ஈட்டுகின்றோம்;செல்வத்தை வைக்குமிடம் எது ?.
வங்கியிலா ? இல்லை வீட்டிலா ?
இல்லை இல்லை அதை வைக்க வேண்டிய இடம் ஏழைகளின் வயிறு என்று விளக்கமளித்து
உலகத்தில் வறுமையை விரட்டும் வழியை கூறுகின்றார்.

தாயின் வயிற்றில் இருந்து பிறந்தோம்; வையத்தில் வாழ்கின்றோம்; நாளும் பொழுது வளர்கின்றோம்; இந்த வளர்ச்சியை எப்படி வரையறுப்பது ?
உயரத்தைக் கொண்டா? இல்லை
உருவத்தைக் கொண்டா ? இல்லை இல்லை
வையத்தில் வாழ்கின்ற நாள்களைக் கொண்டு தானே,
அதனால் தான் வை - வய் - வயது என்று அகிலத்தில் இருக்கும் நாள்களை அளவிடக் கொண்டு அழைத்துக் கொண்டோம்.

பார்த்தீர்களா !!!
வாயில் வரும் வார்த்தையாக எல்லாம் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.

வயதைக் குறிக்கும் மற்றொரு தமிழ்ச்சொல்தான் அகவை என்பது. அகவை என்று அழைக்கப்பட்டதின் காரணம் தான் என்ன?

கொஞ்சம் ஆராய்ந்துதான் பார்ப்போமே.

அகவை என்பதை அகம்+வை என்று பிரிக்கலாம். அகம் என்றால் என்ன?.
உள்ளம் என்பதையே அகம் என்று அழைக்கின்றோம்.

உலகியலை உற்று நோக்கினால் உணர முடியும். உடல்வலிமை இருப்பவர்கள் கூட உள்ளத்தில் உறுதியற்று, உவகையற்று இருப்பதால் வேதனைத்தீயில் வாடுவதைக் கண்ட
வாழ்வியல் தமிழன்,

உடம்புடன் உடன்பாடு கொள்வதைவிட உள்ளத்தோடு உடன்படிக்கை செய்வதே உயிர் வாழ்வதற்கு மட்டுமல்ல, வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்க உதவும் என்பதாலே அகம் என்பதை அளவுக்கோலாக கொண்டு வயதை அகவை என்று அழைத்திட்டான்.

வயதின் வரையறையும், அகவையின் அளவுக்கோலையும் அறியும் பொழுது அன்னைத்தமிழ் மேல் அளவிலா உவகை உண்டாகிறது அல்லவா.

வயதை இன்னும் வேற்றுமொழிச்சொல்லாக வகைப்படுத்துபவர்களுக்கு சொல்லிக் கொள்வது இதுதான்.

உருவ ஒற்றுமையில் ஒத்திருப்பதை விட உள்ளணுக்கள் ( DNA ) ஒத்துப்போனாலே உறவுகள் கூட உரிமை கொண்டாடும் உலகத்தில் உகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

இது வெறும் அறிவியல் அடிப்படை உண்மை மட்டுமல்ல, சொல்லாராய்ச்சிக்கும் அளவுக்கோல் இது என்பதை மறந்துவிட கூடாது.

இப்படி எல்லாம் அள்ள அள்ள குறையாத அமுதம் அன்னைத்தமிழில் அமைந்திருக்கையில்
அயல்மொழிக்கு அடிமையாக கூடாது என்பதே என் அவா.