வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 3

முதல் பாகம்; இரண்டாம் பாகம் ;உணவு சமைப்பதற்கும் , இரவில் விலங்குகளை விரட்டுவதற்கும் தீ தேவைப்பட்டது. அந்தத் தீயைத் தான் அதாவது கதிரவனைக் கடவுளாக ஆதிமாந்தன் கண்டான் என்பதைப் பார்த்தோம்.

ஒரு பொருளின் அழகையோ அல்லது பெருமையோ சொல்ல வேண்டுமெனில் இன்னொரு பொருள் இருக்க வேண்டும் என்பது அகிலத்தின் அழியா விதி.

அப்படி தான் சிலரின் அருமையும் ,பெருமையும் இருக்கும்போது தெரிவதில்லை.இறப்பிற்குப் பின் தான் உணர்கின்றோம்.

ஒருவர் இறந்துவிட்டார் என்பதைத் தலை சாய்ந்துவிட்டது என்றும், மரம் விழந்துவிட்டதை மரம் சாய்ந்துவிட்டது என்றும், நேராக உட்காராமல் இருப்பவரைச் சாய்யாமல் நேராக உட்காரு என்றும் கூறுகின்றோம்.

தீயின் ( கதிரவன்) பெருமையை அதாவது காலையில் தோன்றுவதை, மாலையில் சாயும் போது தான் அதாவது மறையும் போது தான் ஆதிமாந்தன் உணர்ந்தான்.

தீ சாய்வதை அதாவது கதிரவன் மறைவதைத் தீச்சாய் என்றான்.

அதுவே நாளடைவில்

தீச்சாய் - தீச்சாய் - தீசாய் - தீசய் - திசய் - திசை என்றும்,

தீச்சாய் - தீச்சாய் - தீசாய் - தீசா - திசா என்றும் ஆனது.


கதிரவன் ( தீ ) மறைவதை அடிப்படையாக சொல்லப் பட்டதே திசை அல்லது திசா என்பதாகும்.அது பின் கதிரவன் உதிக்கும் மறைக்கும் பக்கத்தைக் குறிக்கும் சொல்லானது.

இன்றும் பள்ளிகளில்,

சூரியன் உதிக்கும் திசை கிழக்கு என்றும்

சூரியன் மறையும் திசை மேற்கு என்றும்

படிக்க காண்கின்றோம்.

கதிரவன் மாலைப் பொழுது சாயங்காலம், சாய்ந்திரம் என்றும் அழைக்கப்பட்டது, சாய்வு என்னும் சொல்லின் அடிப்படையில் தான்.

திசை என்பதற்கு ஆங்கிலத்தில் " direction " என்று சொல்கின்றோம். அந்தச் சொல்லும் தீ ( de ) என்னும் சொல்லின் வழியில் வந்த சொல் தான்.


தொடரும்..............

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப் பட்டது )

களம் ஒன்று ! கவிதை நூறு ! - 1

( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் ந.வீ. சத்தியமூர்த்தி
அவர்கள் " உய்ர்திணை உறவு " என்னும் தலைப்பில் எழுதிய கவிதை )சேர்ந்து மெதுவோட்டம் வந்த
செல்லநாய்
தள்ளிய கழிவை
சட்டத்திற்குப் பயந்து
தாள் பையில்
சேகரித்தபடியே
ஓரச் சாலையில்
ஓட்டம் தொடர்ந்தான்...

அருகிலிருக்கும்
முதியோர் இல்லத்திலிருந்து
அன்றாடம்
அவனைப் பார்த்து
ஆசுவாசம் கொள்ளும் தாய்
தனக்குள் சொல்லிக் கொண்டாள்
"இப்படித்தானே அள்ளினேன்
மழலையில்
இவன் விட்ட கழிவையும்... "
(இது சில நாட்களுக்கு முன் படித்த சப்பான் கவிதையை ,அப்படியே மொழியாக்கம் செய்துள்ளேன்.)

அன்றாடம் மெதுவோட்டம்
ஆச்சரியத்தில் அனைவரும் ...
எடைகுறைந்தது நாய்மட்டும் என்பதால் !

அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 4

பாக்களைப் பருக , படிக்க
1.முதல் ; 2.இரண்டாம் ; 3. மூன்றாம்

அடக்கும் உபாயம் அறிந்தேயான் வந்தேன் !
மடக்குற வள்ளி மணாளா ! - இடபால்
இருக்கின்ற தேவானை என்கின்ற காட்சி,
தருகின்ற இன்பம் தனி !
தனித்தெய்வம் நீயென்பேன் ! - தண்பரங் குன்றம்
இனித்த வகையறிவேன் எந்தாய் ! - குனித்த
புருவமும் செவ்வாய்க் குமிழ்ச்சிரிப்பும் கொண்ட
முருகா வருகவென் முன்.
முன்வரத் தீவினைதான் மூண்டெழு மாமுருகா ?
உன்வேலைக் கண்டவுடன் ஓடுமே ! - என்னிறைவா !
ஐயன் அருணகிரி ஆவேனோ என்பாயா ?
பையப் பெறுவேன் பணிந்து !பணிந்து பணிந்து பகலிர வின்றித்
தணியா மனத்தைத் தருவேன் ! - அணிமா
மயிலும் அயில்வேல் படையும் உடையாய் !
உயிரில் கலந்த உணர்வு !உணர்வில் கலந்தாய் ! உயிரில் கலந்தாய் !
கணபதியின் தம்பியே கந்தா ! - மணவழகா !
ஞானக் குழந்தையே ! நான்மறை நாயகனே !
ஊனக் குழந்தை உனக்கு !உனக்கென்றும் நானடிமை ! உன்னைத்தான் விட்டால்
எனக்கென்றிங் காருந்தான் இல்லை ! - மனம்நிறைந்தாய் !
எங்கள் குலவிளக்கே ! எந்தை சிவபாலா !
தங்க மகனேநீ தாங்கு !தாங்கும் தனிவேலும் தக்ககொடிச் சேவலுமே,
ஏங்கும் துயர்போக்கும் ஏதுக்கள் ! - ஓங்கு
பழமுதிர் சோலை மலைக்கிழவா ! நீதான்
அழவைக்க லாமோ அறி !
இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.

நீ வளர்ந்துவிட்டாய் !

சாப்பிடச் சொல்கிறேன்
நான்...

ஊட்டச் சொல்கிறாய்
நீ !இன்னும் என்ன குழந்தையா ?
வயதிற்கேற்ற வளர்ச்சி வேண்டாமா ...
என்னிலிருந்து
வார்த்தைப் பொறிகள்
கோபச் சூட்டோடு !

உணவில்
உப்புத் தண்ணீர்
ஊற்றுகிறது ...
உன் கோபம் வழிந்து !
தொலைபேசியின் அழைப்பில்
கண் , நாசி துடைத்து ...
எடுத்து " அலோ " சொல்லி
காது கொடுக்கிறாய் ...

புன்னகை கொஞ்சும்
குரலில் ஒட்டிக் கொண்டு
மறுமொழிகிறாய் ...
" கொஞ்சம் சளி " என்று !

நீ வளர்ந்துவிட்டாய்
நான் தான் ...இதோ ஊட்டிக் கொண்டுக்கிறேன்
பாசத்தையும் சேர்த்து
என் பதின்ம வயதுக்
குழந்தைக்கு !


( இது எனக்கு மிகவும் பிடித்த சிங்கை கவிஞர் மலர்விழி இளங்கோவன்
அவர்கள் எழுதிய கவிதை )

தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 2

முதல் பாகம்
காலையில் தோன்றும் கதிரவனைக் கண்ட மாந்தன் அதை ஆதி என்று அழைத்தான்.மாலையில் அந்தத் தீ (கதிரவன்) அணைவதை(மறைவதை)க் கண்டான்.இப்பொழுது அமைதி என்ற சொல்லைப் பார்ப்போம். எவ்வித சலனமின்றி, சத்தமின்றி இருக்கும் நிலையை அமைதி
என்கின்றோம்.ஆனால் அதற்கு உண்மையான பொருள் அது அன்று.
மகாத்மா காந்தி அவர்கள் " ஒடுக்கப்பட்ட சமூகம் ஒன்றில் வன்முறைகள் இல்லாமல் இருக்கலாம் ,அதற்காக அமைதி இருக்கிறது; மகிழ்ச்சியாக இருக்கிறது என்பது பொருள் அன்று " ஒருமுறை சொன்னதாக நினைவு.இன்று ஈழத்தில் அமைதி நிலவின்றது என்பதற்காக மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று பொருள் இல்லை.அப்படி என்றால் அமைதியின் உண்மையான பொருள் என்ன ? ஆனந்தம் இருக்க வேண்டும்; அழகு இருக்க வேண்டும்; ஒழுங்கு இருக்க வேண்டும் என்பது தான்.
இதை இன்னும் விளக்கமாக விரிவாகச் சொல்ல வேண்டுமெனில் சுவாமி விவேகானந்தரின் Peace என்னும் தலைப்பில் கவிதை வரிகளைப் படித்துப் பாருங்கள். ( மொழியாக்கம் jataayu அவர்கள் )
அறிந்து கொள் நண்பா
ஆற்றலிடம் மட்டுமே வரும்
அமைதி

சக்தியாய்த் தோன்றாத சக்தி
இருளில் இருக்கும் ஒளி
ஒளிப்பிழம்பின் நிழல்
அமைதி

பேசாத பேருவகை
சோகப் படாத பெரும் துக்கம்
வாழாத அமர வாழ்வு
அஞ்சலி பெறாத முடிவில்லா மரணம்
அமைதி

இன்பமும் அல்ல துன்பமும் அல்ல
இடைப்பட்டது அமைதி
இரவும் அல்ல பகலும் அல்ல
இவற்றை இணைப்பது அமைதி .

அமைதி என்பதற்கு அழகான, சத்தமற்ற என்ற பொருள் விளக்குகிறது.மேலும் அம் என்பதற்கு (சத்தம்)அற்றுப் போன மற்றும் அழகு என்பதும் விளங்குகிறது.அம்மணம் என்கின்றோம். அப்படி என்றால் ஆடையற்ற நிலையைத் தானே.இங்கும் அம் என்பதற்கு அற்றது என்பது பொருள் விளங்குகிறது. அம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு. அதனால் தான் அதை இரசிக்க விழைக்கின்றோமோ ???????!!!!!!!!!!.
அம் என்பதற்கு அழகு என்னும் பொருள் உண்டு தமிழில் . அதை விளக்கமாக விரிவாக காண்போம்.

அம்புலி - அழகுடைய நிலவு

அம் + உலி = அம்புலியாற்று ; உல் - உல - உலி என்க ; உலா வரும் நிலவு என்பதே.

அம்முலி என்ற மூலச்சொல், தொன்மை காலச்சொல் அம்புலியாற்று.அம்பனத்தி = அழகிய கொற்றவை

அம்பட்டன் = அம் + பட்டன்

நாடி பார்ப்பதற்குப் பயன் பயன்படுத்தப்படும் பட்டுத்துணியைக் கையில் வைத்திருப்பவன்.
மருத்துவன் தாழ்ந்த சாதி என்பது இனக்கொழுப்பால், அதிகாரத்தை அடைய நினைத்தவர்களால் ஏற்பட்டது.அந்தணர்கள்,செல்வந்தர்களுக்கு நாடி பார்க்க பட்டுத்துணியை கையில் விரிக்கும் பார்க்கும் வழக்கமிருந்தது.

அழகிய பட்டுத்துணியை வைத்து நாடி பார்த்தவன் அம்பட்டன் எனப்பட்டான். அம்பட என்பது இச்சொல்லின் திரிச்சொல்லாகும்.

அம்பட்டன் என்பது அழகான மீன் பெயராகும்.
இவ்வாறு அம் என்பதற்கு அழகு என்னும் பொருளில் தமிழில் சொற்கள் உருவாயின.

பொத்தானை அமுக்கு என்று சொல்ல கேட்கின்றோம்.இன்னும் காலை அமுக்கு, கையை அமுக்கு,விளக்கு அணைந்து(அமுங்கி)ப் போச்சு என்று விளம்புக்கின்றோம்.
இன்று உள்ள சூழ்நிலையில் ஆயிரம் சிக்கல்கள் அமுக்க, அதை அமைதியாக அழகான தீர்க்கத் தெரியாமல் அழுத்தத்திற்கு (depression) ஆளாகின்றோம்.அமுக்கமாக இருத்தல் என்றால் வெளியே செய்தியை வராமல் இருத்தல் என்று பொருள்.

இப்படி சொல்வதிலிருந்து விளங்குவது இது தான்.

அமுக்க அதாவது அம் என்பதற்கு மறைவது அல்லது உள்ளே என்பதே பொருள்.
மாலை கதிரவன் மறைவதையும் உள்ளே சொல்வதைப் போன்ற உணர்வை உணர முடிகிறது.

அந்தக் காலை கதிரவனை விட மாலை கதிரவன் தான் அழகாக, அமைதியாக,மறைவதைக்
கண்முன்னே கண்ட ஆதிமாந்தன்
அந்தத் தீ அதாவது மாலை கதிரவனை

அம் + தீ = அம்தீ = அந்தீ = அந்தி என்று அழைத்தான்.

மாலை கதிரவனை அழைத்த அந்த அந்தி என்னும் சொல் பிறகு கதிரவன் மறையும் பொழுதைக் குறித்தது.

அம்+தீ+பொழுது = அந்திப்பொழுது

இப்படி தான் கதிரவனின் மாலைப்பொழுது அழைக்கப்பட்டது.


இந்தச் சொற்களில் எத்தனை அழகான, ஆழமான பொருள் உள்ளது.
ஒரு முறை சொல்லிப் பாருங்கள் !!!

காலையில் தோன்றும் கதிரவன் = ஆதி

மாலையில் தோன்றும் கதிரவன் = அந்தி

எப்படி இனிக்கிறது நம்முடைய தமிழ்
என்பதைப் பாருங்கள் !!!!!!!!!!!


தீயில் தோன்றிய தீந்தமிழ்ச்சொற்கள் இன்று பொருள் மாறி

ஆதி என்பது ஆண்டவனையும், அந்தி என்பது மாலைப்பொழுதைக் குறித்தாலும், இதற்கு எல்லாம் அடிப்படை தீ என்னும் எனப்பட்ட கதிரவன் தான்.

காலையில் தோன்றும் கதிரவனைத்தான் ஆதிமாந்தன் எழுந்தயுடன் கண்டது, அதனால்
அதுவே First அதாவது ஆதி என்னும் சொல்லும் உண்டாயிற்று.

மாலையில் தோன்றும் கதிரவனை உறங்கும் முன் கண்டான். அதனால் அதுவே Last அதாவது அந்தி என்னும் சொல்லும் உண்டாயிற்று.

ஆதி அந்தமில்லா அருட் சோதியே என இறைவனைப் பாடுவது, தொடக்கமும் முடியுமில்லாத இறைவனைப் பற்றியே என அறியலாம்.

இதை வேதாத்திரி மகரிசி அவர்கள் அருமையாக சொல்வதைக் காணலாம்.

இதுவரையிலும் எல்லாவற்றையும் பார்த்து ரசித்து வாழ்ந்தவன், இப்படி ரசிக்கக் கூடியவனும், எண்ணக் கூடியவனுமான என்னை ஆக்கியவன் யார் என்று தன்னையே திரும்பிப் பார்க்கிறான் பாருங்கள். இதுதான் ஆறாவது அறிவு. அறிவையே அறிந்து கொள்ளக்கூடிய அறிவின் உயர்நிலை ஆறாவது அறிவு.

கடலில் இருந்த தண்ணீர் தான் மேகமாகி மழையாகப் பொழிகிறது. அருவியாக, ஆறாக ஓடும் தண்ணீர் மீண்டும் எங்கே சென்று சேர்கிறது? கடலில் தானே? குளமாக, ஏரியாக அந்த நீரைத் தேக்கி வைத்தாலும் புடைத்துக் கொண்டே இருக்கும் அது. கரை உடைந்தால் தன் மூலமான கடலை நோக்கியே விரைந்தோடும். கடலை அடையும்வரை அதற்கு ஓய்வு, அமைதி இல்லை.

இதுபோன்றே, மெய்ப்பொருளே (பிரம்மமே) அணுவாக, பஞ்ச பூதமாகி, ஜீவனாகி, மனிதனாகி இருக்கிறது. அவையெல்லாமே இடைநிலை தான். இனி மனிதன் ஆறாவது அறிவு மேலோங்கப் பெற்று அவன் தன்னிலையை, தான் பிரம்மம் என்ற நிலையை அடைந்தாக வேண்டும். அதுவரை மனிதனுக்கு அமைதி கிட்டாது. எதை அடைய வேண்டுமோ அதை அடையாதவரை வேறெது கிட்டினும் மனக்குறை மனிதன் உள்ளத்தில் தலையெடுத்துக் கொண்டே தான் இருக்கும். அடைய வேண்டியதை அடைந்து அமைதி பெறுவோம்.

எத்தனை உண்மை பாருங்கள் !!!!!!!!!!!!!!


உள்ளம் அமைதி அடையும் போது
இல்லத்திலும்
இதயங்களிலும்
இவ்வுலகில் மகிழ்ச்சி நிலவுகிறது.


இனி யாரும் ஆதியும், அந்தியும் அன்னிய மொழிச் சொற்கள் என்று சொல்ல வேண்டாம்.
அத்தனையும் அழகான அன்னைத்தமிழ்ச்சொற்களே.

இன்னும் தொடரும்..............

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் சொல்லாய்வை உங்களுக்கு விளக்கமாக, விரிவாக அடியேனால் எழுதப்பட்டுள்ளது. )

தீயும் தீந்தமிழ்ச்சொற்களும் - 1
ஆதிவாசியாக அலைந்த மாந்தனுக்கு இரவோ அச்சத்தைத் தந்தது, பகலோ பயத்தைப் போக்கியது. காலையில் எரிந்து மாலையில் அணையும் தீயாக தான்
கதிரவன் அவன் கண்ணுக்குக் காட்சி அளித்தது. இப்படி இருட்டை விலக்கி ஒளியை அளித்த பகலவனை ஆதிமாந்தன் கடவுளாக காண ஆரம்பித்தான்.இப்படி தான் தீ என்பது அவனின் தெய்வம் ஆனது.

தீ-தெய்- தெய்வம்
தீ-தே- தேவு- தேவன்

இதனை ஒவ்வொரு மொழியிலும் காணலாம்.

இலத்தீனில் - deus
சமசுகிருத்தில் - deva
செர்மனில் - tiwaz, tyr
பாலி மொழியில் - தீயுத்
பிராகிருத மொழியில் - Joi, Jyot

முதலில் நெடில் தோன்றி தான் குறில் தோன்றியது என்று சொல்லப்படும்.

அதைக் குழந்தைகளின் , கன்றுகளின் மொழிகளில் காண முடியும்.

இதனால் தான் ஆ என்பதற்கு முதல், தொடக்கம் என்று பொருள் உண்டாயிற்று.

தீயைக் காணும்போது அது பயத்தினால் மட்டுமல்ல பார்த்தாலே வருவது, "ஆ! தீ " அல்லது " ஐய்யோ ! தீ " என்பது தான். ஏனென்றால் காலையில் எழுந்தயுடன் ஆதிமாந்தன் கண் முன்னே கண்ட காட்சி
அந்தத் தீ ( கதிரவன் ). தான்

அந்தத் தீ அதாவது காலை கதிரவனை ( கடவுளை )ஆதீ என்று அழைக்க ஆரம்பித்தான்.

அந்தத் + தீ அல்லது ஆ + தீ = ஆதீ

ஆதீ - ஆதி

இப்படி தான் ஆதி என்ற சொல் பிறந்தது. அது ஒரு தமிழ்ச்சொல் தான்.

(ஆதி = காலையில் தோன்றும் கதிரவன் அல்லது கடவுள் )

உழவிற்கும் வாழும் உலகிற்கு ஒளியை அளித்த கதிரவன் ஆதிபகவன் எனப்பட்டான்.

கதிரவன் காலையில் தொடங்கி, மாலையில் மறையும் வரையான பொழுதை அழைக்க சொல் தேவை பட்டது. அப்பொழுதும் அவனுக்கு அந்தத் தீ தான் நினைவிற்கு வந்தது. இப்படி தான்

தீ- தீனம்-தினம்

என்றும் சொல் தோன்றியது.

இதை உலக மொழியில் அனைத்திலும் காணலாம்.

Dies - இலத்தீனில்
Dydd - வேல்சு மொழியில்
Day - ஆங்கிலத்தில்
Dygn - சுவீடன் மொழியில்
தர்ரோஜ் - குசராத்தியில்


உண்மையில் Day என்பதற்கு அகராதி அளிக்கும் பொருள் "The time between sunrise and sunset " or "half of the day that is not night " இதை Daytime என்னும் சொல்லில் பார்க்கவும்.

ஆனால் அது பொருள் மாறி 24 மணி நேரத்தையும் அதாவது முழுநாளையும் குறித்தது. On which day? என்று சொல்லக் காணலாம். ( मेरा जन्म दिन्- இந்தியில் )


தொடரும்..............

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரையைத் தழுவி எழுதப் பட்டது )

எமக்கு எவருமில்லையா ? சொல்லுங்கள் !!!


தாள்முழுக்கச் செய்திகள்; எம்மக் களைப்பற்றி
நாள்முழுக்கப் பேசுவோம் வாய்கிழிய மட்டும்;
அகலவில்லை துன்பங்கள் இன்னுமே இங்கு
நகர்வது நாட்கள்மட் டும்.


சொல்லியழ எங்களுக்கு வார்த்தையில்லைப், பாருங்கள்!
பால்மணம் மாறாத பாலகனைப் பாவிகளே!
உங்களுக்(கு) எப்படித்தான் ஈரமற்றுப் போனதோ
எங்களைக் கொன்றழிக் க!

************************************************

அழுது புலம்புகிறேன் நானிங்கே உன்னைத்
தொழுதென்ன புண்ணியம் ஆண்டவனே வேதனையைத்
தீர்ப்பாய் எனவுன்னை வேண்டினேன் வேடிக்கை
பார்க்கின்றாய் நீயன்றோ இங்கு!

****************************************

அடியேனையும் வெண்பா எழுதிய வைத்த அகரம் அமுதா அவர்களுக்கு நன்றிகள்

எட்டப்பன் மார்கள் இருக்கும் வரை....காட்டிக் கொடுக்கவும் கூட்டிக் கொடுக்கவும்
ஆட்சி அரியணை என்றே அலைகின்ற
எட்டப்பன் மார்கள் இருக்கும் வரையெல்லாம்
எட்டாக் கனியே எமக்கு!

இறைவா ! இவர்களுக்கு ஏனிந்த இன்னல் !
உறைவிடமும் இல்லை ! உணவும் இல்லை !
கரைவது கேட்கிறதா உந்தன் செவியில்
விரைந்து வழியென்று காட்டு.
ஆயுதம் தந்து பலனடைந்த நாய்களால்
தாயிழந்து தந்தையின்றி போயின சேய்களிங்கே
மண்ணில் இதயமற்ற இந்தியப் பேய்களால்
கண்ணீர்க் கதையான திங்கு.
அழகனந்தாதி ( வெண்பா அந்தாதி ) - 3

முதல் பகுதியைப் படிக்க , பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்

இரண்டாம் பகுதியைப் படிக்க, பாக்களைப் பருக இங்கே சொல்லுங்கள்

சுகவா ரிதியே ! சுவையே ! பயனே !
இகபர வாழ்வின் இருப்பே ! - குகநாதா !
ஏங்கும் அடியாரின் ஏக்கம் தவிர்ப்பவனே !
நீங்கா நினைவானய் நீ !
நீயிருக்க என்னபயம் ? நீயிருக்க ஏதுபயம் ?
தாயிருக்கச் சேயழுமோ தண்ணருளே ? - நாயினேன்
செய்தபிழை போகவினிச் செய்யாமல் காத்திடுவாய் !
தெய்வயானை மன்னவா தேற்று !
தேற்றத் தெளிந்தேனே தெய்வமென நீயென்றே !
ஊற்றாய் உனைநினைக்க ஓயாதேன் ! - போற்றுமோர்
ஆற்றுப் படைதந்த அக்கீரன் ஆவேனோ ?
ஏற்றுமே காப்பாய் எனை !எனையாளும் எந்தைபிரான் ஏரகத்துச் செட்டி !
வினைநீக்க வந்தவடி வேலா ! - நினையாயோ ?
போரூரில் வாழ்கின்ற புண்ணியனே ! கண்ணியனே !
காரூரும் தென்பழனி காப்பு !காப்புக் குரியவனே ! கண்ணின் மணியானே !
பாப்புனையும் பைந்தமிழ் ஆனவனே ! - சேப்ப
விழிநீர் பெருக்கியுனை வேண்டுகின்றேன் வேலா !
பழிநீங்க வேண்டல் பணி !பணிந்தாரை வாழ்விக்கும் பால முருகா !
அணிமா மயிலின் அழகா ! - தணிகை
மலைமேல் குடிகொண்ட மால்முருகா ! என்றன்
அலைபாயும் உள்ளம் அடக்கு !இது அத்தனையும் புலவர் வ.சிவசங்கரன் அவர்கள் எழுதியவை.

சில ஐயங்களும் தீர்வுகளும் (சந்திப்பிழை) - 1

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது என்பது ஒரு விதி; வன்றொடர்க் குற்றியலுகரகத்தில் வலி மிகும் என்பது இன்னொரு விதி ; இங்கே ஒர் ஐயம் எழுகிறது. ஒரு தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும், வன்றொடர்க் குற்றியலுகரமாகவும் அமையும் போது வலி மிகுமா ? - என்பதே அந்த ஐயம். ஓர் எடுத்துக்காட்டுடன் பார்த்தால் நன்கு விளங்கும்.

தாலாட்டு + பாடினாள் = தாலாட்டைப் பாடினாள் அல்லது தாலாட்டு பாடினாள் .

தாலாட்டுப் பாடினாள் = தாலாட்டு என்பது வன்றொடர்க் குற்றியலுகரம் : விதிப்படி வலி மிகும் , எனவே தாலாட்டுப் பாடினாள் என்று வலி மிகுந்து புணர்தல் வேண்டும்.

தாலாட்டு பாடினாள் = தாலாட்டைப் பாடினாள் என்பதே பொருள்; ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்தது, எனவே , இரண்டாம் வேற்றுமைத் தொகை . " இரண்டாம் வேற்றுமைத் தொகையில் " வலி மிகாது என்பது விதி. எனவே , " தாலாட்டு பாடினாள் " என்றே இயல்பாக வலி மிகாமல் புணர்தல் வேண்டும்.

இவ்வாறு இருவிதமாகவும் புணர்வதற்கு இடந்தருகின்ற இந்தத் தொடரை எப்படி எழுதுவது ? " தாலாட்டுப் பாடினாள் " என்று வல்லெழுத்து மிகுந்து எழுதினாலும் , " தாலாட்டு பாடினாள் " என்று மிகுக்காமல் இயல்பாக எழுதினாலும் பொருள் மாறவில்லை.

இத்தகு சூழலில் ஒற்றை இட்டு எழுதுவோர்களும், விட்டு எழுதுவோர்களும் என இருவிதக் கொள்கையாளர்களும், உளர்.

ஆனால் கீழ்க்காணும் தொடரைப் பாருங்கள்;

பிட்டு + தின்றார் = பிட்டு தின்றார் அல்லது பிட்டுத் தின்றார்.

பிட்டு தின்றார் ;

இங்குப் பிட்டு என்பது ஓர் உண்பண்டம்; சிற்றுண்டி, " பெயர்ச்சொல் " ; பிட்டைத் தின்றார் என்பது பொருள்.

பிட்டு தின்றார் ; இர‌ண்டாம் வேற்றுமைத் தொகை; என‌வே ஒற்று மிக‌வில்லை.

பிட்டுத் தின்றார்; பிடு என்ப‌து வினைப்ப‌குதி ; நிலைமொழி ஈற்றொற்று இர‌ட்டித்துப் பிட்டு என்று வினையெச்ச‌மாய் நின்ற‌து.
சிறு சிறு துண்டுக‌ளாக்கி என்று பொருள் த‌ரும் " வ‌ன்றொட‌ர்க் குற்றுக‌ர‌ம் ஈற்று வினையெச்ச‌த்தில்

வ‌லி மிகுமென்ப‌து விதி ; என‌வே வ‌லி மிகுந்து புண‌ர்ந்த‌து.


இங்கே ஒற்றை இட்டு எழுதும்பொழுதும் ஒரு பொருளும், ஒற்றை விட்டு எழுதும்பொழுதும் வேறு பொருள் தோன்றுவ‌தைக் காண‌லாம்.

என‌வே,இத்த‌கு சூழ‌லில் கீழ்க்காணும் ப‌ரிந்துரை ஏற்புடையதாக‌த் தோன்றுகிறது.
நிலைமொழி வ‌ன்றொட‌ர்க் குற்றிய‌லுக‌ர‌மாக‌ நின்று , இர‌ண்டாம் வேற்றுமைத் தொகையாக‌ ஒரு தொட‌ர் அமையும் போது பொருள் மாற்ற‌ம் இல்லையேனில் ஒற்று இட்டும், விட்டும் எழுதுத‌லை எழுதுவோரின் விருப்ப‌த‌ற்கே விட்டு விட‌லாம். ஆனால் பொருள் மாற்ற‌ம் ஏற்ப‌டும் போது , அதாவ‌து நிலைமொழி பெய‌ர்ச்சொல்லாய் ஒரு நிலையிலும் வினையெச்ச‌மாய் இன்னொரு நிலையிலும் இய‌ங்கும்போது முன்ன‌த‌ன்பின் ஒற்றை மிகுக்காம‌லும் , பின்ன‌த‌ன்பின் ஒற்றை மிகுத்துமே எழுதுத‌ல் வேண்டும், அப்பொழுது தான் உரிய‌ பொருள் வெளிப்ப‌டும் ; பொருள் குழ‌ப்ப‌ம் நேராது.


( மருதூர் அர‌ங்க‌ராச‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ நூலிருந்து )

அடைய நினைத்த கனவுகள்...
கிடந்துத் துடிக்கிற(து) என்னுடைய தேகம்
அடைய நினைத்த கனவுகள் அத்தனையும்
மண்ணில் புதைந்து மறைந்தே அழிவதைக்
கண்முன்னே காண்கின்றப் போது!

குண்டுகளின் சத்தத்தில் கேட்கவா போகிறது
ண்டுகளின் சத்தம் ? இரத்தம் வழிந்தோடும்
த்தக் களத்தில் அமைதி திரும்புமா ?
த்தமும் ஒய்ந்திடு மா ?

புதையல்