வள்ளுவரும் வாலியும் -1
தொகுப்பு தமிழ் at 3:40 AMஎவ்வளவோ பேர் திருக்குறள் விளக்கம் எழுதிவிட்டாலும், வாலியின் வசன வடிவில் எழுதிய கவிதையுரை படித்துப் பாருங்கள். வார்த்தையில் விளையாடி இருப்பதைக் காணலாம்.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. ( குறள் எண் : 122 )
அடக்கம் என்பது
அரும்பொருள் ; கட்டிக் கா ;
அதனிலும்
அரும் பொருள் கிடைக்கா !
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. ( குறள் எண் : 65 )
உடலுக்கு இன்பம் - நம் சேயின்
விரல் படல் ; நம் -
காதுக்கு இன்பம் - நம் சேயின்
குரல் படல் !
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. ( குறள் எண் : 267 )
வெப்பம் கூடக்கூடச்
செப்பம் ஆகும் தங்கம் ;
வருத்தம் கூடக்கூடத்
திருத்தம் ஆகும் தவம் !
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். ( குறள் எண் : 334 )
நாள் ஒரு
வாள் ; அது
வாழ்வை அரியும் - என
வாலறிவு அறியும் !
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. ( குறள் எண் : 347 )
ஒட்டிக் கொள்ளும் ஆசைகளை
உதறுக; உதறாவிடில் -
கட்டிக் கொள்ளும் கவலைகள் ;
கதறுக !
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )
சின்ன உதவி
செய்தாலும் ;அது -
என்ன உதவி
என்றாலும் ;
அதை
அவன் -
காலத்தில் செய்ததைக்
கவனி ;
அதைவிடப் பெரியதல்ல - இவ்
அவனி !