வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

இடம் விட்டு இடம்...

இருக்க இடமிருந்தும்
இருக்க மனம்
இல்லாத மனிதர்கள்
இடம் விட்டு இடம் பெயர்ந்ததால்
இடுகாடாய்
மாறிப் போயின கிராமங்கள்நகர்ந்து வந்த மனிதர்களால்
நகரங்களோ
நரகங்களாக‌
மாறிப் போயின.

ஒடிப் போன மழை
ஒட்டையாய்ப் போன ஒசோன்
இத்தனையும் ஏதனால் ?

இயற்கையின் மடியில்
தவழ வேண்டிய மனிதர்களோ
தடம் மாறி
இடம் மாறிப் போனதால் தானே

இருந்த இடத்திலே
இருந்த வண்ணம்
இயக்கக்கூடிய மின்பொத்தன்கள்

இடுப்பை வளைக்க‌
இயலா வண்ணம்
இருக்கும் இருக்கைப்பணிகள்

இப்படி
இடம் விட்டு இடம் நகராது
இருக்கும் இன்றைய வாழ்க்கை
இறுதியில் நடப்பது என்ன‌ ?

வசதி வேண்டி
வியர்வை சிந்த மறுக்கின்றோம்
விளைவு
வியாதிக்கு
விருந்தாகிப் போகின்றோம்
சனியும் குருவும்
இடம் விட்டு இடம் பெயர்ந்ததால்
இருள் விட்டுப் போகுமென்றும்
தலைவிதி மாறுமென்றும்
தவமாய்த் தவமிருப்போர்
தவற விடுவது என்ன‌ ?பொன்னையும்
பொருளையும் கொடுத்துப்
பெற‌ முடியாத‌
கால‌த்தையும் நேர‌த்தையும்
மட்டுமல்ல‌


சாதனையாளர்களாக மாறி
சரித்திரத்தில்
இடம் பிடிக்க வேண்டியவர்கள்

சவங்களாகவே வாழ்ந்து
இறந்து விடுவதும் தானே
சலவை இயந்திரமும்
அரவை இயந்திரமும்
ஆட்சி செய்ய‌
ஆரம்பித்த யுடன்...

இடம் விட்டு
இடம் மாறிப் போனவை
தான் என்ன ?

அறிய வேண்டுமெனும்
ஆவல் இருப்பின்
அருட்காட்சியகத்தில்
போய்ப் பாருங்கள்ஆட்டாங் கல்லையும்
அம்மிக் கல்லையும்
கட்டணம் செலுத்திக்
காணக் கூடிய‌
காலம் வரக் கூடும்.

( கவிமலையின் இம்மாத "இடம் விட்டு இடம் " தலைப்புக்கான என்னுடைய கிறுக்கல்கள் )

ஓசை ஒத்தப்பாகள் ( Limeriaku ) - 3காவலுக்குப் பூனை
கவிழ்ந்து கிடக்குது
சட்டி பானை


நிலவைத் தொட்ட விண்கலம் அங்கே
நீரிருப்பைச் சொன்னது
நீண்டவரிசையில் நிற்கும் மண்கலம் இங்கே


இறப்பும் இழப்பும் தந்தன காயங்கள்
இருந்தும் இருக்கின்றோம்
எல்லாம் காலச் சக்கரத்தின் மாயங்கள்

ஆண் ஆதிக்க அவலத்தால் பாஞ்சாலி
பந்தாயப் பொருளானாள் பாரதத்தில்
துகிலுரிந்த துச்சாதனனோ அங்கே பலசாலி


இதனுடைய இலக்கணம் ( இது என்னுடைய வரையறை )

1.மூன்று அடிகளில் இருக்க வேண்டும்.
2.முதல் அடியில் கடைசி சீரும், கடைசிஅடியில் கடைசி சீரும் ஓசை ஒத்து வரவேண்டும்.
3.முதல் அடியின் சீரின் எண்ணிக்கையும், கடைசி அடியின் சீரின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்க வேண்டும்.
4.ஒரு அடிக்கு குறைந்தது இரண்டு சீரும் அதாவது குறளடியாக அல்லது அதிகமாக நான்கு சீரும் அதாவது அளவடியாக தான் இருக்க வேண்டும்.
5.அடிமோனையும்,சீர்மோனையும் அமைத்து எழுதினால் நன்று.
6.கடைசி அடி " நச் " என்று முத்திரை பதிக்க வேண்டும்.

களம் ஒன்று ! கவிதை நூறு ! - 2( மலர்விழி இளங்கோவன் அவர்கள் தலைமுறை இடைவெளி என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)

வடையைச் சுட்டது
பாட்டி என்கிறேன் நான்...

காக்கை என்கிறாய் நீ !

தலையாட்டுகிறேன்
மறந்தும் இவர்களிடம்
புன்செயில் என் தாத்தா
கடலை போட்டார்
என்பதை மட்டும்
சொல்லி விடக்கூடாது
என்று உறுதியோடு !


.............................................................................(குகை மா.புகழேந்தி அவர்கள் கால விளக்கம் என்னும் தலைப்பில் எழுதிய‌ கவிதை)


கைக்கிளைக்கும்
பெருந்திணைக்கும்
விள‌க்க‌ம் சொன்ன‌
தாத்தாவுக்கு
விள‌க்க‌ம் சொல்லிக்
கொண்டிருந்தான்
பேர‌ன்
கோமோவுக்கும்
லெஸ்பிய‌னுக்கும்

.................................................................

கவிதை எனப்படுவது யாதெனின்.......
( படித்ததில் பிடித்தது ‍ - வைரமுத்து அவர்களின் வெண்பாகள் )

புதுக்கவிதை என்றும் புகழ்மரபு என்றும்
குதிக்கிறதே இங்கிரண்டு கூட்டம் - ‍எதுகவிதை ?
வாழும் கவிதை வடிவத்தில் இல்லையடா
சூழும் பகைவருக்குச் சொல்.

*********************************************


வெண்பாவை நல்ல விருத்தத்தை ஏற்றதமிழ்
என்பாவை மட்டுமென்ன ஏற்காதா - என்தோழா
போதைதர வன்று புதிய விடியலுக்குப்
பாதையிட வல்லதே பாட்டு.

துளிப்பா (haiku) - 1


( படித்ததில் பிடித்தது - கவிஞர்களின் பலரின் கைவண்ணத்தில் எழுதப்பட்டவை )

சாதி வாழ்க ! சாதி வாழ்க‌
வாழ வேண்டமா
சாதித் தலைவர்

*************************

சேரிக்குள்
தினமும் வந்துபோகும் தேர்
சூரியன்

*************************

பாட்டி இறந்தும்
கூடவே இறந்துவிட்டன‌
கதைகள்

**************************

தண்ணீரைப் ப‌துக்கிய‌தால்
அரிவாள் வெட்டு
இள‌நீர் மீது

நண்பனின் கல்லூரிக் கவிதைகள்வருத்தம்


வீரப்பனின் வீராப்பு குறித்து
தேவாரத்திற்கு வருத்தம்

தேவாரத்தின் கெடுபிடியைக் கண்டு
வீரப்பனுக்கு வருத்தம்

காவிரியில் தண்ணீர் விடுவதைப் பற்றி
பட்டேலுக்கு வருத்தம்

காவிரியில் தண்ணீர் விடாததைப் பற்றி
கலைஞருக்கு வருத்தம்

மழை வரவில்லையென்று
விவசாயிக்கு வருத்தம்

மழை வந்து விட்டதே என்று
உப்பு விற்பவனுக்கு வருத்தம்

தான் மட்டும் உள்ளே இருக்கிறோம்
என்று "சசி"க்கு வருத்தம்

த‌ன்னையும் உள்ளே வைத்துவிடுவார்க‌ளோ
என்று "ஜெ"க்கு வ‌ருத்த‌ம்
வருத்தம் !
வருத்தம் !
வருத்தம் !

உன் கடைக்கண் பார்வை கிட்டவில்லை என்று
அனைவருக்கும் வருத்தம்

உன்னை காணவில்லையே என்று
எனக்கு மட்டுமே வருத்தம்காதல்


புரியாதவன்
தாடி வளர்க்கிறான்

புரிந்தவன் இன்னொரு
லேடியைப் பார்க்கிறான்

பேச்சுச் சுதந்திரம்பேச்சுச் சுதந்திரம்
தந்தீர்
நாங்களும்
பேசு பேசென்று
பேசுகிறோம்.

விண்வெளியில்
ஓடிய‌
இரோகிணியைப்
ப‌ற்றிய‌ல்ல‌

வீட்டை விட்டு
ஓடிய‌
இரோகிணியைப்
ப‌ற்றி !

( படித்ததில் பிடித்தது - காண்டீபன் அவர்களின் வரிகள் )

வள்ளுவரும் வாலியும் -2

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. (குறள் 45)


இல்லறம் - என‌
இயம்பப் பெறும் -

வாழ்க்கை
வயலில் ...

அன்பும் அறனும் விதைநெல் ;
பண்பும் பயனும் விளைநெல் !அறம்சொல்லும் நெஞ்சத்தான் அன்றை புறம்சொல்லும்
புன்மையால் காணப் படும். (குறள் 185)


அறம்பேசும் நெஞ்சம்
அதுவல்ல என்பதை - அது
புறம்பேசும் நேரம்
புரிந்து கொள்ளும் மன்பதை !அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம் (குறள் 35)


பொறாமையைப் -
பொடி;
அவாவை -
அடி;
வெகுளியை -
விடு ;
சுடு சொல்லைச் -
சுடு ;

நான்கும்
நான்கு தீங்கு ;அவற்றின்
நிழலில்
நிற்காமல் நீங்கு !

நான்கையும் புறம் - தள்ளி
நடத்துதல் அறம் !


கற்றுஈண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றுஈண்டு வாரா நெறி. (குறள் 356)


மெய்கண்டாரிடம் செல் ;
மெய்ப்பொருளைக் கல் !

பிறக்கையில் ஒரு குழி ;
இறக்கையில் ஒரு குழி ;

இவை
இரண்டையும்
தவிர்த்திடத்
தென்படும் ஒரு வழி !

வள்ளுவரும் வாலியும் -1எவ்வளவோ பேர் திருக்குறள் விளக்கம் எழுதிவிட்டாலும், வாலியின் வசன வடிவில் எழுதிய கவிதையுரை படித்துப் பாருங்கள். வார்த்தையில் விளையாடி இருப்பதைக் காணலாம்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. ( குறள் எண் : 122 )


அடக்கம் என்பது
அரும்பொருள் ; கட்டிக் கா ;
அதனிலும்
அரும் பொருள் கிடைக்கா !
மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. ( குறள் எண் : 65 )


உடலுக்கு இன்பம் - நம் சேயின்
விரல் படல் ; நம் -
காதுக்கு இன்பம் - நம் சேயின்
குரல் படல் !
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. ( குறள் எண் : 267 )


வெப்பம் கூடக்கூடச்
செப்பம் ஆகும் தங்கம் ;
வருத்தம் கூடக்கூடத்
திருத்தம் ஆகும் தவம் !
நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப் பெறின். ( குறள் எண் : 334 )


நாள் ஒரு
வாள் ; அது
வாழ்வை அரியும் - என‌
வாலறிவு அறியும் !
பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. ( குறள் எண் : 347 )


ஒட்டிக் கொள்ளும் ஆசைகளை
உதறுக; உதறாவிடில் -
கட்டிக் கொள்ளும் கவலைகள் ;
கதறுக !

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. ( குறள் எண் : 102 )


சின்ன உதவி
செய்தாலும் ;அது -
என்ன உதவி
என்றாலும் ;

அதை
அவன் -
காலத்தில் செய்ததைக்
கவனி ;
அதைவிடப் பெரியதல்ல - இவ்
அவனி !

நண்பா உனக்கொரு வெண்பா(வைரமுத்துவின் வெண்பாகள் )
போதை மருந்தில் பொருந்தாத இன்பத்தில்
பாதை வழுவிய பாலுறவில் - காதை
கழுவாத ஊசி கழிவுரத் தத்தில்
நுழையும் உயிர்க்கொல்லி நோய்.ஊரைக் குடிக்கும் உயிர்க்கொல்லி நோயொன்று
பாரைக் குடித்துவிடப் பார்க்கிறதே பாரடா
வையத்தில் மானுடம் வாழமோ என்னுமோர்
அய்யத்தில் உள்ளோம் அடா.ஓரினச் சேர்க்கை உறவாலே மானுடத்துப்
பேரினச் சேர்க்கையே பிய்ந்துவிடும் - பாரில்
இயற்கை உறவென்னும் இன்பம் இருக்கச்
செயற்கை உறவென்ன சீ .தோகைமார் தந்த சுகநோயோ உன்கட்டை
வேகையிலும் விட்டு விலகாதே - ஆகையினால்
விற்பனைப் பெண்டிரொடு வேண்டாம் விளையாட்டு
கற்பனையை வீட்டுக்குள் காட்டு.துணையோடு மட்டும் தொடர்கின்ற வாழ்வுக்(கு)
இணையாக வேறுமருந் தில்லை - மனைவியெனும்
மானிடத்து மட்டுமே மையல் வளர்த்திந்த‌
மானுடத்தை வாழ்விப்போம் வா.
பெண்ணின் சதைமட்டும் பேணுகின்ற ஏடுகளைக்
கண்ணைக் கெடுக்கும் கலைகளை ‍- இன்றே
எரியூட்ட வேண்டும் இளையகுலம் வாழ‌
அறிவூட்ட வேண்டும் அறி !

சொல்ல சொல்ல இனிக்குதடா ! முருகா !


முருகா ! குமரா ! குறைதீர்க்கும் எங்கள்
மருகா ! அமரா ! கறைபடியா(து) எங்களைக்
காத்தே அருளுங் கடவுளென் றுன்னைத்தான்
வைத்தோம் ! இருள்நீக் கிடு !

பால்மணம் மாறாத வேலன் ! பழத்தாலே
கோமணம் கொண்டானே ! எங்கள் குமரனவன் !
மண்மணம் வீசும் மலையழகன் ! எங்கள்
தமிழ்மணம் கொண்டகட வுள் !

கவிஞர் கவி சோதி அவர்களின் கவிதை


நாங்கள்
சேற்றில்
கால்
வைக்காவிட்டால்

நீங்கள்
சோற்றில்
கை வைக்க முடியாது.


---------------------------------------
கவிதையை ஆழமாக பார்த்தால் இருவேறு பொருள் உள்ளதைக் காணலாம்.இது தான் வார்த்தை விளையாட்டு கவிதை என்பது.

------------------------------------


1.சேறு என்று எழுதி இடையில் கால்(ர) வைத்தால் தான்,சோறு என்னும் சொல் கிடைக்கும்.

2.உழவுக்கூலித்தொழிலாளி தன்னுடைய காலைச் சேற்றில் இறங்கி,ஏர் உழுது,நாற்று நட்டு,உரம் வைத்து, வேலி கோலி,களை எடுத்து,பயிர் வளர்ந்து, அறுவடை செய்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும்.

காரணம் - காரியம்

ஒரு செயலைச் செய்வதற்கு மூலமானது ( Cause ) காரணம் எனப்படும்.காரணம் ஏற்படுத்தும் வினை காரியம் எனப்படும். காரணா (Karana) என்னும் வேற்றுமொழிச்சொல்லும், காரிய (Karya)என்னும் வேற்றுமொழிச்சொல்லும் காரணம்,காரியம் என்று தமிழில் திரிந்தாகக் கூறுவார்கள்.காரண காரியம் என்பதை தூண்டுதலும் துலங்கலும் Cause and Effect எனக் கூறலாம். ஒரு செயலைச் செய்வதற்கான மூலம் (Essential element) தேவைப்படுகிறது.அம்மூலத்தின் விளைவாக செய்கை (Action) நிகழ்கிறது.காரணம்,காரியம் என்னும் சொற்கள், தமிழ்ச்சொற்கள் என்பதை விரிவாக காணலாம்.

மழை பெய்வதால் ஏரி,குளம் போன்ற நீர்நிலைகள் நிறைகின்றன.இது காரியம் ஆகும். நீர்நிலைகள் நிறைய முகில் கூட்டங்களே மூலமாய் உள்ளன. இது காரணம் ஆகும்.எளிமையான இந்த எடுத்துக்காட்டில் அடங்கியிருக்கும் ஆழமான பொருளை நோக்கலாம்.கார் என்பது, மழை,முகில் என்ற பொருளைத் தரும் தமிழ்ச்சொல்லாகும்.கரு ‍- கருமை - கார் என விரியும்.
கார்காலம் = மழைக்காலம்
கார்முகில் = கரியமுகில்
கார் என்னும் தமிழ்ச்சொல்,சொல்லப்படும் இடத்திற்கேற்றவாறு,முகில்,மழை என்னும் பொருள் கொள்ளப்படும்.

அணம் என்ற சொல்லுக்கு உயர்வு,மேலே (Up,High)என்றவாறு தமிழில் பொருளுண்டு.
அன் என்ற மூலச்சொல்லின்று அணம்,அணா,அன்னம்,அண்ணி,அண்ணன்,அண்ணல் போன்ற சொற்கள் விரிவடைகின்றன.

அணா - அன்னம் : மேல்வாய்
அண்ணன் - உடன் பிறந்தவரில் மூத்தவர்
அண்ணல் - உயர்ந்தவர்
அணிகம் - உயர்ந்த பல்லக்கு
அணா -அணி :உடலின் மேலே அணியும் ஆடை,நகை

கார்+அணம்

கார் - முகில்
அணம் - மேலே
மேலே உள்ள முகில் கூட்டம் மழை பெய்ய காரணம் ஆகிறது.

அயம் என்பது நீர்நிலை,குளம்,ஏரி என விரியும்
கார் அயம் = நீர் நிறைந்துள்ள குளம்.

யா என்பது நீரைக் குறித்த தொல்தமிழ்ச்சொல்லாகும்.
யா - யம் - அயம் என விரிந்தது.

அயம் = தமிழில் சொல்லப்பட்ட நீர்நிலைக்கான சொல்.

யம் (Yam) = ஏரி,கடலைக் குறித்த எகிப்தியச்சொல்.

யா(Ea) = கடலைக் குறித்த பாபிலோனியச் சொல்.

யா என்றே தொல் தமிழ்ச்சொல்லின்றே , யம் - அயம் போன்ற சொற்கள் விரிந்தன.

கார் அணம் = நீர் தோன்றுவதற்கான மூலம் ( Cause,Origin,Source)

கார் அயம் = மூலத்தின் செயல்பாட்டு விளைவு (Operation)

வானத்தில் கார் முகில் தோன்றுவது காரணம்

நிலத்தில் மழையாகப் பொழிவது காரியம்

கார்+அயம் என்பது காரயம் எனப்படும்.
காரயம்,காரியம் எனவும் திரியும்.

மழையும்,முகிலையும் எடுத்துக்காட்டுகளாகக் கொண்டு உருவான தமிழ்ச்சொற்களே காரணம், காரியம் என்பனவாகும்.

( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )

அகிலாண்டம்


சிவனின் மனைவியாகிய பார்வதிக்குள்ள பல பெயர்களில் அகிலாண்டேசுவரி என்பதும் ஒன்றாகும். அகிலம்+அண்டம்+ஈசுவரி என்ற முச்சொற்களின் கூட்டே அகிலாண்டேசுவரி என்பதாகும்.அகிலம் என்பது வேற்றுமொழிச்சொல் ,அதுவே அகில் ( Akil அல்லது Ahil ) என்று சொல்லப்படதாகவும் கூறப்படும். தமிழ்நாட்டிலுள்ள தேசிய இயக்கங்களாகத் தம்மைக் காட்டிக் கொள்பவர்கள், அகில பாரத என்றும், அகில இந்திய என்றும் சொல்வதைக் காணலாம். அகிலம் என்ற சொல் , விரிந்த - பரந்த - எல்லாம் என்ற பொருளில் விரியும்.

அகிலாண்டம் - விரிந்து பரந்த உலகம்

அகிலாண்ட கோடி - எண்ணிலடங்கா உலகம் ( வானம், வீண்மீன்கள், கோள்கள் உள்ளிட்டவை )

அகண்டம் - விரிந்த பரப்பளவைக் கொண்டது.

கண்டம் x அகண்டம் என்ற எதிர்மறைப் பொருளில், அகண்டம் சொல்லப்பட வில்லை.

கண்டம் என்னும் தமிழ்ச்சொல்லே , குமரிக்கண்டம் என்று சொல்லப்பட்டதை நோக்குக.

கள் - காண் என்ற மூலத்தமிழ்ச்சொற்களிலிருந்து பல்வேறு சொற்கள் விரிந்துள்ளன.

கள் - காண் - காணி = கண்ணால் பார்க்கப்படும் நிலப்பகுதி

காண் - காட்சி = பார்வை, தோற்றம் என்றவாறு விரியும்

கண் - காண்டல் - காதல் = பார்வையால் பரிமாறப்படும் அன்பு

கண் - கண்ம - காண்மம் - காமம் = பார்த்த பின் விரும்புவது,விருப்பம்

கல் என்பதற்கு இடம், பகுதி என்ற பொருளும் உண்டு.

கல் - கண்டம் = விரிந்த பகுதி
அகண்டம் = மேலும் மேல் விரிந்த பகுதி

அட்டம் = அண்மையிலுள்ளவை
அகண்டம் = தொலையில்லுள்ளவை

அகண்டம் என்பது அகல் என்ற சொல்லின் நீட்சியே

அகல் = ஒரிடத்தை விட்டுச் செல்லுதல், விரிவடைதல்,எங்கும் பரவி நிற்றல் ( Leave, Increase,Spread etc )

அகல் - அகலம் = விரிவடைதல் ( Breadth , Width, Extension )

அகலிடம் = அகன்று விரிந்துள்ள உலகம்

அகல் - அகில் = எங்கும் பரவும் மணம்

அகல் என்னும் தமிழ் மூலச்சொல், அகில் என்னும் சொல்லப்பட்டது.

கல் = ஒரிடத்தில் நிலையாக நிற்பது, மலையைக் குறிக்கும்

அகல் = நிலையாக நிற்காமல் விரிந்து செல்வது

கல் x அகல் எதிர்மறைப் பொருள் தமிழில் சொல்லப்பட்டத்தை நோக்குக.

இன்னும் விரிவாக

கட்டு = ஒன்று சேர்

குச்சியைக் கட்டு, காலைக் கட்டு என்பதைப் பார்க்கவும்

அகட்டு = விரி

காலை அகட்டு = காலை விரி

கட்டு x அகட்டு தமிழிலும் எதிர்மறைப் பொருள் உண்டு என்பது உறுதியாகிறது.

அகல் - அகில் - அகிலம் = உலகம்

அகண்டம் - அண்டம் எனவும் சுருங்கும்

அண்டா = அகன்ற பாத்திரம்

அகிலம்+ அண்டம் = அகிலாண்டம் = பேரண்டம் ( Universe )

அகிலம் (உலகம் ) வட்ட வடிவமானது கோள வடிவமானது என்னும் கருத்தில், கண் என்ற உறுப்புடனும் இணைக்கப் பட்டது.

அதனால் தான் கண்ணுக்கு அக்கி என்னும் சொல்லும் வழங்கப்பட்டது.

அகிலம்,அண்டம்,கண்டம், காண்டம், அகிலாண்டம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச்சொற்களே. அவை சிற்சில ஒலிப்பு மாற்றங்களுடன் தமிழின் திரிமொழிகளில் திரிந்துள்ளன என்பதை உணர வேண்டும்.


( சொல்லாய்வு அரிமா ம.சோ.விக்டர் அவர்களின் ஆய்வுக் கட்டுரை )

இது தொடர்பான இன்னொரு கட்டுரை ; கற்கண்டு

வண்ணங்களில் சில எண்ணங்கள்

( படித்ததில் பிடித்தது - அப்துல் இரகுமான் அவர்களின் வரிகள் )வேடிக்கை யானவன்தான்
மனிதன் ! முரண்பாடே
வாடிக்கை அவனுக்கு
வண்ணத்தின் அருத்தங்கள்
வெவ்வேறு நேரத்தில்
வெவ்வேறு அவனுக்கு

சுதைவீடு பழசானால்
சுண்ணாம்பு கொண்டுவந்து
வெள்ளை அடித்துத்தன்
வீட்டைப் புதுப்பிப்பான்
சதைவீடு பழசாகும்
தருணத்தில் தலைநரைத்தால்
வெள்ளையின்மேல் கறுப்புநிறம்
விரும்பி அடிக்கின்றான்.


கறுப்பென்றால் துக்கத்தைக்
காட்டும் என்பான் ; கன்னியரின்
கறுப்பு விழிகண்டால்
களிப்புற்று ஆடுவான்.

சிவப்புநிறம் ஆபத்தின்
சின்னமென்பான் ; பெண்கன்னம்
சிவந்து தலைகுனிந்தால்
நாணத்தின் குறியென்பான்

மஞ்சள் நிறமென்றால்
மங்கல நிறமென்பான்
மஞ்சள்கா மாலைவந்தால்
மங்கலநோய் என்பதில்லைமனப்பத் திரிக்கைக்கு
மஞ்சள் தடவுவான்; ஆம்
மனச்செய்தி அச்சடித்தால்
மஞ்சள்பத் திரிக்கையென்பான்.

பசும்புல்லைப் பூமியின்
பச்சை உடையென்பான்
உடையவிழ்க்கும் வருணையைப்
பச்சை எழுத்தென்பான்.கரும்நீலம் காக்கும்
கடவுளின் நிறமென்பான்
உடல்நீலம் பாய்ந்துவிட்டால்
உயிர்நீங்கும் குறியென்பான்.

எந்தப் புரட்சி
எங்கே நடந்தாலும்
அந்தப் புரட்சிக்கு
அமைக்கின்ற பெயர்களெல்லாம்
வண்ணக ளால், அன்றோ
வைக்கின்றார் ; உலகத்தில்

செல்வம் பொதுவாக்கச்
சிவப்புப் புரட்சியென்பார்
பயிரின் வளம்பெருகப்
பசுமைப் புரட்சியென்பார்
வீடெல்லாம் பால்பெருக
வெள்ளைப் புரட்சியென்பார்வளங்கள் இல்லையென்றால்
வாழ்க்கையில் அழகில்லை
எண்ணங்கள் இல்லையென்றால்
எதுவுமே இங்கில்லை.

இணைமொழிகள் - 1

" அக்கம்பக்கத்தைப் பாரு ? "

" அங்கும் தான் பிள்ளை குட்டி இருக்கிறது "

" ஏதாவது அடிதடி உண்டா ? "

" எவ்வளவு அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறது ? "

" நீயும் தான் இருக்கிறாயே "

இது இன்னும் இல்லங்களில் தாயிடம் இருந்து ஒலிக்கும் வசைமொழிகள்.

பெற்றோர் உறங்கிய உடன், அவள் அலுங்காமல் குலுங்காமல் அடி எடுத்து வைத்தாள்,சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சுவர் ஏறிக் குதித்தாள்.

இது கதைகளில் படிக்கும் உரைநடைமொழி.

தடித்த எழுத்தில் காணப்படும் வசைமொழியும், உரைநடைமொழியும் இணைமொழி என்று கூறப்படும்.

இன்னும் பேசும்போது " தாட்டு பூட்டு " என்றும் " குண்டக்கா மண்டக்கா " என்றும் இப்படி எல்லாம் சொல்கின்றோம். ஏதோ எதுகைமோனையுடன் விளம்புகின்றோம் என்று நினைக்க தோன்றுகிறது. உண்மையில் ஒவ்வொன்றிலும் அழமான நுட்பமான பொருள் உண்டு. வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் தமிழில் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.

இணைமொழி என்றால் என்ன ?
இரு வேறுபட்ட சொற்கள் இணைந்து வருவது.
இணைவது என்றால் எப்படி ?
1.எதுகையால் இணைந்து வருவது
(எ-டு)
அக்கம் பக்கம்
அடிதடி

இவை தலையா கெதுகை எனப்படும். அதாவது முதல் (மோனை ) எழுத்து ஒத்திருக்க வேண்டும். இரண்டாம் எழுத்தும் ( எதுகை ) பிற எழுத்துகளும் அதே எழுத்தாக வர வேண்டும்.

2.உயிரின எதுகை
(எ-டு)
அடக்கம் ஒடுக்கம்
அலுப்பு சலிப்பு

இப்படி பல வகைகள் உள்ளன.


சில இணைமொழிகளை இங்கே பார்ப்போம்.

1.அறிகுறி

அறிகுறி என்பதை மேலொட்டமாக பார்த்தால் அடையாளம் என்னும் பொருள் அளிக்கிறது. இதை விரிவாக நோக்குவோம்.

அறி - ஒலி, மணம் ஆகியவற்றால் உண்டாகும் அடையாளம்
குறி - உருவத்தால் அல்லது தோற்றத்தால் உண்டாகும் அடையாளம்


வண்டி வரும் அறிகுறியே இல்லையே என நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவதைக் காணலாம். உண்மையில்
வண்டிவரும் ஓசையும் ( ஒலியும் ) இல்லை; புகை போன்ற தோற்றமும் இல்லை என்பதே இங்கே அழமான நுட்பமான பொருளாகும்.மழைபொய்யும் அறிகுறியே இல்லை என்றால், இடிமின்னல் போன்ற ஒலியும்; மோடம், முகில் போன்ற தோற்றங்கள் இல்லை என்பதே இங்கே விரிவாக விளக்கமாக கூறப்படுகிறது.

2.கிய்யாமிய்யா

அவன் பேச்சா பேசுகிறான் ? கிய்யாமிய்யா என்கிறான் எனப் பழித்துச் சொல்லுவதுண்டு.

இங்கே

கிய்யா - குருவிக்குஞ்சின் ஒலியாகும்
மிய்யா - பூனைக்குட்டியின் ஒலியாகும்.

ஒன்றை ஒருவனிடம் கேட்க அதற்கு விளக்கமாகவும் , தெளிவாகவும் கூற முடியாமல் மருண்டு பேசுவதைக் கிய்யாமிய்யா என்பது வழக்கம்.
குருவிக்குஞ்சும்,பூனைக்குட்டியும் எவற்றையோ கண்டு அஞ்சி ஒலிப்பது போல இவனும் அஞ்சி ஊறுகிறான் மற்றும் பொருள் புலப்பட வண்ணம் பேசுகிறான் என்பதை விளக்குவதே இந்தக் கிய்யாமிய்யா .

3. சண்டைசச்சரவு

சண்டை - மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு
சச்சரவு - மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு

வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு அளவில் நடப்பது போர் என்றும் அழைக்கப்படும்.
சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப்படாது, அதனால் சண்டை என்பது கைகலப்பு என்று கூறப்படும்,சிலர் கைகலப்பு இன்றி வாய்கலப்பிலும் ஈடுப்படுவதுண்டு, இரண்டையும் இணைத்துப் பார்த்தே " சண்டை சச்சரவு போடாதீர்கள் " என்று சொல்லுவதுண்டு.

இப்படி எத்தனையோ உள்ளன். அதற்கு ஒவ்வொன்றுக்கும் அழமான அழகான நுட்பமான பொருளுண்டு.இதைப் பற்றி விரிவாக விளக்கமாக
புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் இணைச்சொல் அகராதி என்னும் நூலில்
எழுதியுள்ளார்.

(தொடரும் )