வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

இணைமொழிகள் - 1

" அக்கம்பக்கத்தைப் பாரு ? "

" அங்கும் தான் பிள்ளை குட்டி இருக்கிறது "

" ஏதாவது அடிதடி உண்டா ? "

" எவ்வளவு அடக்கம் ஒடுக்கமாக இருக்கிறது ? "

" நீயும் தான் இருக்கிறாயே "

இது இன்னும் இல்லங்களில் தாயிடம் இருந்து ஒலிக்கும் வசைமொழிகள்.

பெற்றோர் உறங்கிய உடன், அவள் அலுங்காமல் குலுங்காமல் அடி எடுத்து வைத்தாள்,சுற்றுமுற்றும் பார்த்து விட்டு சுவர் ஏறிக் குதித்தாள்.

இது கதைகளில் படிக்கும் உரைநடைமொழி.

தடித்த எழுத்தில் காணப்படும் வசைமொழியும், உரைநடைமொழியும் இணைமொழி என்று கூறப்படும்.

இன்னும் பேசும்போது " தாட்டு பூட்டு " என்றும் " குண்டக்கா மண்டக்கா " என்றும் இப்படி எல்லாம் சொல்கின்றோம். ஏதோ எதுகைமோனையுடன் விளம்புகின்றோம் என்று நினைக்க தோன்றுகிறது. உண்மையில் ஒவ்வொன்றிலும் அழமான நுட்பமான பொருள் உண்டு. வாயில் வரும் வார்த்தைகள் எல்லாம் தமிழில் வடிவம் பெற்று விடுவதில்லை.சிற்பி செதுக்கும் சிற்பம் போல செதுக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு செந்தமிழ்ச்சொற்களும் என்பதை சிந்தையில் கொள்ள வேண்டும்.

இணைமொழி என்றால் என்ன ?
இரு வேறுபட்ட சொற்கள் இணைந்து வருவது.
இணைவது என்றால் எப்படி ?
1.எதுகையால் இணைந்து வருவது
(எ-டு)
அக்கம் பக்கம்
அடிதடி

இவை தலையா கெதுகை எனப்படும். அதாவது முதல் (மோனை ) எழுத்து ஒத்திருக்க வேண்டும். இரண்டாம் எழுத்தும் ( எதுகை ) பிற எழுத்துகளும் அதே எழுத்தாக வர வேண்டும்.

2.உயிரின எதுகை
(எ-டு)
அடக்கம் ஒடுக்கம்
அலுப்பு சலிப்பு

இப்படி பல வகைகள் உள்ளன.


சில இணைமொழிகளை இங்கே பார்ப்போம்.

1.அறிகுறி

அறிகுறி என்பதை மேலொட்டமாக பார்த்தால் அடையாளம் என்னும் பொருள் அளிக்கிறது. இதை விரிவாக நோக்குவோம்.

அறி - ஒலி, மணம் ஆகியவற்றால் உண்டாகும் அடையாளம்
குறி - உருவத்தால் அல்லது தோற்றத்தால் உண்டாகும் அடையாளம்


வண்டி வரும் அறிகுறியே இல்லையே என நெடுநேரம் வண்டிக்குக் காத்துக் கிடப்பவர் கூறுவதைக் காணலாம். உண்மையில்
வண்டிவரும் ஓசையும் ( ஒலியும் ) இல்லை; புகை போன்ற தோற்றமும் இல்லை என்பதே இங்கே அழமான நுட்பமான பொருளாகும்.மழைபொய்யும் அறிகுறியே இல்லை என்றால், இடிமின்னல் போன்ற ஒலியும்; மோடம், முகில் போன்ற தோற்றங்கள் இல்லை என்பதே இங்கே விரிவாக விளக்கமாக கூறப்படுகிறது.

2.கிய்யாமிய்யா

அவன் பேச்சா பேசுகிறான் ? கிய்யாமிய்யா என்கிறான் எனப் பழித்துச் சொல்லுவதுண்டு.

இங்கே

கிய்யா - குருவிக்குஞ்சின் ஒலியாகும்
மிய்யா - பூனைக்குட்டியின் ஒலியாகும்.

ஒன்றை ஒருவனிடம் கேட்க அதற்கு விளக்கமாகவும் , தெளிவாகவும் கூற முடியாமல் மருண்டு பேசுவதைக் கிய்யாமிய்யா என்பது வழக்கம்.
குருவிக்குஞ்சும்,பூனைக்குட்டியும் எவற்றையோ கண்டு அஞ்சி ஒலிப்பது போல இவனும் அஞ்சி ஊறுகிறான் மற்றும் பொருள் புலப்பட வண்ணம் பேசுகிறான் என்பதை விளக்குவதே இந்தக் கிய்யாமிய்யா .

3. சண்டைசச்சரவு

சண்டை - மாறுபாட்டால் உண்டாகும் கைகலப்பு
சச்சரவு - மாறுபாட்டால் உண்டாகும் வாய்கலப்பு

வீடு, தெரு, ஊர் அளவில் நடப்பவை சண்டை என்றும், நாடு அளவில் நடப்பது போர் என்றும் அழைக்கப்படும்.
சண்டையில் பெரும்பாலும் கருவிகள் பயன்படுத்தப்படாது, அதனால் சண்டை என்பது கைகலப்பு என்று கூறப்படும்,சிலர் கைகலப்பு இன்றி வாய்கலப்பிலும் ஈடுப்படுவதுண்டு, இரண்டையும் இணைத்துப் பார்த்தே " சண்டை சச்சரவு போடாதீர்கள் " என்று சொல்லுவதுண்டு.

இப்படி எத்தனையோ உள்ளன். அதற்கு ஒவ்வொன்றுக்கும் அழமான அழகான நுட்பமான பொருளுண்டு.இதைப் பற்றி விரிவாக விளக்கமாக
புலவர் இரா. இளங்குமரன் அவர்கள் இணைச்சொல் அகராதி என்னும் நூலில்
எழுதியுள்ளார்.

(தொடரும் )