
(முனைவர் கு.அரசேந்திரன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )
சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டும் என்பது திருவாசகம். பாடும் பாட்டிற்கு உரிய பொருளின் ஆழத்தை உணர்வதுமட்டும் போதாது. சொல்லும் ஒவ்வொரு சொல்லிற்கும் உள்ள பொருளையும் நாம் ஆழமாக உணர வேண்டும்.
" எல் " என்னும் சொல் கதிரவனைக் குறித்தது என்று அறிவது முதல்நிலை. ஏன் கதிரவனை
" எல்" என்று சொன்னோம் என்று அறிவது இரண்டாம் நிலை.
ஒரு தமிழ்ச்சொல் என்ன காரணத்தால் என்ன பொருளில் எந்த வேரிலிருந்து பிறந்திருக்கின்றது என்று நாம் முதலில் கண்டு தெளிய வேண்டும். அந்தத் தெளிவு நமக்கு வந்த பிறகுதான் பிற மொழிகளில் புழங்கும் இன்ன இன்ன சொற்களுக்கு இந்தத் தமிழ்ச்சொல் மூலமாக இருக்கலாம் என்று நம்மால் சொல்ல முடியும். உலக மொழிகளின் வேர்ச்சொல் அறிஞர்கள் கையாளும் நெறிமுறைகளில் அடிப்படையானது இதுவே.
கதிரவன் " எல் " என்று அழைக்கப்பட்டதற்கு அது ஒளியுடையதாய் இருப்பதே காரணம் என்று பலரும் கூறுகின்றனர். " எல்லே இலக்கம் " என்னும் தொல்காப்பிய நூற்பாவினை இதற்கு எடுத்துக்காட்டாக அவர்கள் கூறுகின்றனர்.இவ்வாறு கூறும் அறிஞர்களிடம் " எல் " என்னும் சொல்லிற்கு " ஒளி " என்னும் பொருள் எவ்வாறு தோன்றியது என்று கேட்போமானால் அவர்களால் அதற்கு விடை சொல்ல முடியாது. ஆதலால் கதிரவன் ஒளியுடைதாய் இருப்பதால் " எல் " என்று சொல்லப் பட்டது என்னும் கருத்து பொருத்தமாகப் படவில்லை.
" எல் " என்பதற்கு உயர்தல் , மேலெழுதல் என்பதே மூலப்பொருள்.பின்வரும் சொற்களைக் கவனியுங்கள்.
எல்- எல்பு- எம்பு - எம்புதல் = மேலெழுதல்
எல் - எல்கு - எக்கு - எக்குதல் = வயிற்றை மேலே உயர்த்தல்
எல் - எல்கு - எக்கு - எக்கர் = நீர்நிலைகளில் உயர்ந்திருக்கும் மணல்திட்டு
இப்படியாகப் பல சொற்கள் " எல் " வழி உருவாகியுள்ளன.

கதிரவன், தோற்றம், கலையில் கீழ்த்திசையில் கடலில் தோன்றி மேலெழுந்து உயர்ந்து வருவது போன்ற தோற்றத்தைத் தருகின்றது. அதன் காரணமாகவே கதிரவனுக்கு " எல் " என்னும் பெயரைப் பழந்தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகள் முன் சூட்டினார்கள்.
" அகலிரு விசும்பின் பாயிருள் பருகிப்
பகல்கான் றெழுதரும் பல்கதிர்ப் பருதி "
என்னும் பெரும்பாணாற்றுப்படைத் தொடரில் பருதியாகிய கதிரவனின் எழுதரும் தன்மை சுட்டப் பட்டுள்ளது.
கதிரவனின் சிறப்புக்களில் கடலில் காலையில் மேலெழுந்து உயர்தல் போன்ற காட்சித் தன்மையே அதன் முதற் பொருள். ஒளியுடையதாய் இருக்கும் அதன் சிறப்பு வழிப்பொருள்