வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

முறையான உச்சரிப்பு முறை - 1

( புத்தகத்தைப் படிப்பதே அரிதாகும் இக்காலத்தில், இணையத்தில் வாயிலாக எதையும் அறிந்து கொள்ளும் போக்கு
உள்ளமையில் இக்கட்டுரையை இங்கே வடிவம் பெற்றுள்ளது.)

உச்சரிப்புக்கு முதன்மையாய் உள்ளது வாய். வாயில் பலவேறு பகுதிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானவை.

நா(க்கு)
பற்கள்
உதடுகள்
அண்ணம்
ஈறு
உள்நாக்கு முதலியன.

அண்ணம் என்பது, வாயில் அரைவட்டமாக உள்ள மேல் பகுதி. இந்த அண்ணத்தை மூன்று பகுதிகளாகக் கூறலாம். மேல் முன் பற்களுக்கு அருகில் உள்ளது நுனி அண்ணம்; அண்ணத்தின் இடைப்பகுதி நடு அண்ணம்; நடு அண்ணத்துக்கும் உள் நாக்குக்கும் இடைப்பட்ட அடி அண்ணம். முதலில் இவற்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும்.

உச்சரிப்பில் நுணுக்கமான வேறுபாடுகளை உடைய எழுத்துகள் சில உள்ளன. அவ்வெழுத்துகளை மூன்று தொகுதிகளாக இங்கு எடுத்துக் கொள்வோம். அவை;

(அ) ல, ழ, ள
(ஆ)ண, ந, ன
(இ) ர, ற என்பன.

முதலில் ல, ள, ழ - இவற்றை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மேல்வாய்ப் பல்லின் அடியை, நுனிநா தொட்டுப் பொருந்த வேண்டும். நாவின் இரு பக்கங்களும் தடித்து மேல்வாய்ப் பற்களின் அடியைப் பொருந்த வேண்டும். அப்பொழுது வருவது " ல் " . அவ்வாறு பொருந்தி (நா(க்கு))ப் பெயர்ந்தால் வரும் ஒலி " ல " படத்தைப் பாருங்கள்.



(எ-டு)
கல்,பல்,பல,நலம்,பலப்பல,அல்லல்,வல்லவன்,நல்லார்,மலை,
பல்லி,பல்லெல்லாம்.


இதனையடுத்து " ள " என்னும் எழுத்தை எப்படி உச்சரிப்பது என்பதையறிவோம்.

நுனி நா(க்கு)ச் சற்று மேல்நோக்கி வளைந்து அண்ணத்தின் (மேல்வாயின்) நடுப்பாகத்தை அல்லது அதற்குச் சற்றுக்கீழ் தடவுதலால் " ள " வரும். நா தடவாமல் அப்படியே பொருந்தி நின்றால் அதன் மெய்யெழுத்தாகிய " ள் " வரும். ஒலித்துப் பாருங்கள்.





(எ-டு)
பளபள,வளம்,கள்,பள்ளம்,உள்ளே,தள்ளு,பிள்ளை


" ழ " இந்த எழுத்து தமிழுக்கே சிறப்பான எழுத்து. பல மொழிகளில் இந்த எழுத்து - ஒலி இல்லை.இதனைச் சரியாக உச்சரிப்பதில் பலர் இடர்ப்படுகிறார்கள். முறையைத் தெரிந்து கொண்டால் உச்சரிப்பது எளிதாகிவிடும்.

நாவின் நுனி மேல்நோக்கி (உள்நாக்கை நோக்கி) வளைந்து, சிறிது வருடி (தடவி)னால் " ழ " வரும். நா பொருந்தினால் அதன் மெய்யெழுத்தான " ழ் " வரும். இவ்வெழுத்தைப் பலமுறை உச்சரித்துப் பாருங்கள்.





(எ-டு)
பழம்,விழா,கூழ்,ஏழை,எழில்,உழுதொழில்
" ஏழைக் குழந்தை வாழைப்பழத்துக்கு விழுந்து விழுந்து அழுதது " என்னும் இத்தொடரைப் பலமுறை சொல்லிச் சொல்லிப் பழகுங்கள். " ழ " கரம் உங்கள் நாவில் ஒழுங்காகத் தவழும்.

"ல"வின் பின், "ள", அதன் பின்னர் "ழ" என்னும் முறையில் இம்மூன்று எழுத்துகளும் வரும் என்பதை நினைவில் கொண்டால் உச்சரிப்புச் சீராய் வரும்.

ல, ள, ழ - என்னும் இவ்வெழுத்துகளையும் இவற்றின் இன எழுத்துகளையும் கொண்ட சில சொற்களும் அவற்றின் பொருள்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது.

பலம் - சத்து , வலிமை ( ஒரு பலம் - முன் வழக்கில் இருந்த நிறுத்தல் அளவை )
பழம் - கனி, மூத்தது, முதிர்ந்தது

வலம் - வலப்பக்கம்,வெற்றி
வளம் - மிகுதி,அழகு,செல்வம்,செழுமை

விலா - வயிற்றின் பக்கப் பகுதி
விளா - விளாமரம்
விழா - திருவிழா

வலி - நோய்,வல்லமை,இழு(த்தல்)
வளி - காற்று
வழி - பாதை,இடம்,காரணம், மிகுந்து வடி(தல்)

விலை - பொருளின் மதிப்பு
விளை - உண்டாக்கு, ஏற்படு
விழை - விரும்பு,வேண்டு,பழகு

கொழு - கொழுத்தல், கொழுப்பு
கொளு - கருத்து,பொருத்தும் கருவி
கொலு - கொலு வைத்தல், கொலு வீற்றிருத்தல்

வால் - விலங்குகளின் வால், தொங்கும் உறுப்பு
வாள் - வெட்டும்/அறுக்கும் கருவி, அரிவாள்
வாழ் - பிழைத்திரு,உயிர்வாழ்

இவ்வாறு பல சொற்கள் உள்ளன. அவற்றின் எழுத்துகளும் உச்சரிப்புகளும் மாறுபடுவதால் பொருள்களும் மாறுபடுகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இப்படிப் பொருள் வேறுபடும் சில வாக்கியங்களையும் காண்போம்.

(எ-டு)
தவலை கிணற்றில் விழுந்தது.
தவளை கிணற்றில் விழுந்தது.

முன்னது " தவலை " - அதாவது நீர்க்குடம் கிணற்றில் விழுந்தது என்றும், பின்னது " தவளை " - நீர்வாழ் உயிரினம் ஒன்று நீரில் குதித்தது என்றும் பொருள்படும்.

தலையை வெட்டினான்.
தழையை வெட்டினான்.

இவற்ற்றில் முன்னது உடல் உறுப்பாகிய " தலையை " வெட்டினான் என்னும் பொருளையும், பின்னது " தழையை " - அதாவது தாவரங்களின் இலையை வெட்டினான் என்னும் பொருளையும் உணர்த்தும். உச்சரிப்புத் தவறானால் பொருளே வேறுவிதமாய்ப் போய்விடுகிறதல்லவா ? இப்படிப் பல எடுத்துக் காட்டுகளைச் சொல்லலாம்.

ல, ள, ழ - இம்மூன்று எழுத்துகளின் முறையான உச்சரிப்பையும், அவ்வெழுத்துகளாலாகும் சொற்களைத் தவறாக உச்சரிப்பதால் ஏற்படும் பொருள் மாற்றத்தையும் அறிந்தோம்.



( முனைவர்.தி.முத்து - கண்ணப்பன் அவர்கள் எழுதியது )

( தொடரும் )