வணக்கம்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்
Photobucket

சில ஐயங்களும் தீர்வுகளும் (சந்திப்பிழை) - 1

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது என்பது ஒரு விதி; வன்றொடர்க் குற்றியலுகரகத்தில் வலி மிகும் என்பது இன்னொரு விதி ; இங்கே ஒர் ஐயம் எழுகிறது. ஒரு தொடர் இரண்டாம் வேற்றுமைத் தொகையாகவும், வன்றொடர்க் குற்றியலுகரமாகவும் அமையும் போது வலி மிகுமா ? - என்பதே அந்த ஐயம். ஓர் எடுத்துக்காட்டுடன் பார்த்தால் நன்கு விளங்கும்.

தாலாட்டு + பாடினாள் = தாலாட்டைப் பாடினாள் அல்லது தாலாட்டு பாடினாள் .

தாலாட்டுப் பாடினாள் = தாலாட்டு என்பது வன்றொடர்க் குற்றியலுகரம் : விதிப்படி வலி மிகும் , எனவே தாலாட்டுப் பாடினாள் என்று வலி மிகுந்து புணர்தல் வேண்டும்.

தாலாட்டு பாடினாள் = தாலாட்டைப் பாடினாள் என்பதே பொருள்; ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வந்தது, எனவே , இரண்டாம் வேற்றுமைத் தொகை . " இரண்டாம் வேற்றுமைத் தொகையில் " வலி மிகாது என்பது விதி. எனவே , " தாலாட்டு பாடினாள் " என்றே இயல்பாக வலி மிகாமல் புணர்தல் வேண்டும்.

இவ்வாறு இருவிதமாகவும் புணர்வதற்கு இடந்தருகின்ற இந்தத் தொடரை எப்படி எழுதுவது ? " தாலாட்டுப் பாடினாள் " என்று வல்லெழுத்து மிகுந்து எழுதினாலும் , " தாலாட்டு பாடினாள் " என்று மிகுக்காமல் இயல்பாக எழுதினாலும் பொருள் மாறவில்லை.

இத்தகு சூழலில் ஒற்றை இட்டு எழுதுவோர்களும், விட்டு எழுதுவோர்களும் என இருவிதக் கொள்கையாளர்களும், உளர்.

ஆனால் கீழ்க்காணும் தொடரைப் பாருங்கள்;

பிட்டு + தின்றார் = பிட்டு தின்றார் அல்லது பிட்டுத் தின்றார்.

பிட்டு தின்றார் ;

இங்குப் பிட்டு என்பது ஓர் உண்பண்டம்; சிற்றுண்டி, " பெயர்ச்சொல் " ; பிட்டைத் தின்றார் என்பது பொருள்.

பிட்டு தின்றார் ; இர‌ண்டாம் வேற்றுமைத் தொகை; என‌வே ஒற்று மிக‌வில்லை.

பிட்டுத் தின்றார்; பிடு என்ப‌து வினைப்ப‌குதி ; நிலைமொழி ஈற்றொற்று இர‌ட்டித்துப் பிட்டு என்று வினையெச்ச‌மாய் நின்ற‌து.
சிறு சிறு துண்டுக‌ளாக்கி என்று பொருள் த‌ரும் " வ‌ன்றொட‌ர்க் குற்றுக‌ர‌ம் ஈற்று வினையெச்ச‌த்தில்

வ‌லி மிகுமென்ப‌து விதி ; என‌வே வ‌லி மிகுந்து புண‌ர்ந்த‌து.


இங்கே ஒற்றை இட்டு எழுதும்பொழுதும் ஒரு பொருளும், ஒற்றை விட்டு எழுதும்பொழுதும் வேறு பொருள் தோன்றுவ‌தைக் காண‌லாம்.

என‌வே,இத்த‌கு சூழ‌லில் கீழ்க்காணும் ப‌ரிந்துரை ஏற்புடையதாக‌த் தோன்றுகிறது.
நிலைமொழி வ‌ன்றொட‌ர்க் குற்றிய‌லுக‌ர‌மாக‌ நின்று , இர‌ண்டாம் வேற்றுமைத் தொகையாக‌ ஒரு தொட‌ர் அமையும் போது பொருள் மாற்ற‌ம் இல்லையேனில் ஒற்று இட்டும், விட்டும் எழுதுத‌லை எழுதுவோரின் விருப்ப‌த‌ற்கே விட்டு விட‌லாம். ஆனால் பொருள் மாற்ற‌ம் ஏற்ப‌டும் போது , அதாவ‌து நிலைமொழி பெய‌ர்ச்சொல்லாய் ஒரு நிலையிலும் வினையெச்ச‌மாய் இன்னொரு நிலையிலும் இய‌ங்கும்போது முன்ன‌த‌ன்பின் ஒற்றை மிகுக்காம‌லும் , பின்ன‌த‌ன்பின் ஒற்றை மிகுத்துமே எழுதுத‌ல் வேண்டும், அப்பொழுது தான் உரிய‌ பொருள் வெளிப்ப‌டும் ; பொருள் குழ‌ப்ப‌ம் நேராது.


( மருதூர் அர‌ங்க‌ராச‌ன் அவ‌ர்க‌ள் எழுதிய‌ நூலிருந்து )

புதையல்