
" திருமால் குன்றத்துச் செல்கு விராயின்
பெருமாள் கெடுக்கும் பிலமுண்டு "
-சிலப் .காடுகாண்.,(91-92)
என்பது இளங்கோவடிகள் வாசகம்.
கோவலன், கண்ணகி, கவுந்தி மூவரும், உறையூரிலிருந்து மதுரை நோக்கிச் செல்கிறார்கள். வழியில், பாண்டி நாட்டிலிருந்து திருவரங்கப் பெருமானை வணங்கவரும் மாங்காட்டு மறையோன் ஒருவனைச் சந்திக்கின்றார்கள். பாண்டியர் பெருமை, பாண்டிநாட்டிப் பெருமை பற்றியெல்லாம் அம்மறையோன், கோவலன் முதலானோரிடம் கூறுகிறான். அப்பொழுது, மதுரை செல்லும் வழியுரைக்கும்போது மலவன் குன்றம் வரும் என்றும், அக்குன்றத்தில்
" பிலம் " ஒன்று உள்ளது என்றும், அப்பிலத்துள் மூன்று பொய்கைகள் உள்ளன என்றும் கூறுகின்றான்.
கம்பராமாயணத்திலும் இச்சொல் இடம்பெற்றுள்ளது.சிறைபட்டிருக்கும் சீதையை வானரங்கள் தேடுகின்றன்; குகை ஒன்றிற்குள்ளும் சென்று தேடுகின்றன். இதனைக் கம்பர்,
" பிலம் புக்கு நீங்கு படலம் " என்ற பகுதியிற் சொல்வார். மண்ணிற்குள் ஆழமாய்ச் சென்றிருக்கும் குகையை இப்பிலச்சொல் எவ்வாறு குறித்தது ?
தமிழில், " புல் " என்பதற்குத் துளை என்பது பொருள். பச்சைநிறப் புல்லும், அது துளையுடையதாய் இருப்பதனாலேயே அப்பெயரைப் பெற்றது. புல் என்னும் இத்துளைப் பொருள் வேர்ச்சொல்தான், புல்-புலம் எனத் துளையுடைய குகையைக் குறித்துப், பின் புலம்-பிலம் எனத் திரிவதாயிற்று. கால்நடைகள் உண்ணப் பயன்படும் புல், பேச்சு வழக்கில், பில்-பில்லு எனத் திரிவது காணலாம். இங்கு உகரம் - இகரமாக மாறியுள்ளது.
சில இடங்களில், மொழியில் மூலவழக்கினும், அதிலிருந்து திரிந்த அடுத்தகட்ட வழக்கே செவ்வழக்குத் தகுதியைப் பெற்று விடுவதுண்டு. புய் - என்பதிலும் பிய் என்பதே இன்று செவ்வழக்கு.
புய் - பிய் போலவும், புல் - பில் போலவும், உகர - இகரத் திரிபில், புல் - புலம் -பிலம் என்பதாகவே இக் குகைச்சொல் தமிழில் தோன்றியது.
(முனைவர் கு.அரசேந்திரன் அவர்களின் தமிழறிவோம் (தொகுதி - 2 ) என்னும் நூல் இருந்து )
குகைப் பாதை, சுரங்கப் பாதை என்னும் சொற்களுடன் பிலப்பாதை, பிலச்சாலை என்கின்ற புதியச்சொற்களை உருவாக்க முடியும்.
இல்லையெனில் புலப்பாதை, புலச்சாலை என்றும் சொல்லாக்கம் செய்யமுடியும்.
1.underpass - புலவழிச்சாலை (கீழே உள்ளப் படத்தைப் பார்க்க)

2.outer ring road - புறவழிச்சாலை (கீழே உள்ளப் படத்தைப் பார்க்க)

சொல் அகராதி
1.பிலம் - குகை , சுரங்கம் - cave

2.underpass - புகுவழிப்பாதை, புலவழிப்பாதை
3..outer ring road - புறவழிச்சாலை